அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தில் தரம் 10 மற்றும் 11 வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சு அனுமதி

🕔 May 3, 2023

– ஏ.எல். நிப்றாஸ் –

க்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயத்தில் இக் கல்வியாண்டில் தரம் 10 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கும், அடுத்த கல்வியாண்டில் தரம்-11 இனை ஆரம்பிப்பதற்கும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகிவற்றின் அயராத முயற்சியினாலும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா, உயரதிகாரிகள், பாடசாலைச் சமூகம் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பினாலும் இது சாத்தியமாகியுள்ளது.

1945ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, ஆயிரக்கணக்கான பல்துறைசார்ந்த வல்லுநர்களை மட்டுமன்றி, பிரதேசத்தில் ஒழுக்கமுள்ள கட்டமைக்கப்பட்ட மாணவ சமூதாயத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது.

இதுவரை இப் பாடசாலையில் தரம் 9 வரையே மாணவர்கள் கல்வி கற்றுவந்த நிலையில், அதனை மேலும் தரமுயர்த்துவதற்கு கடந்த காலங்களில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் அம்முயற்சிகள் அப்போது கைகூடவில்லை.

இந்நிலையில் கடந்த வருடம் இப்பாடசாலையில் உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்ட பழைய மாணவர் சங்கம், இப்பாடசாலையை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றுவது தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உள்ளடங்கலாக – பாடசாலையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றியது.

இதனையடுத்து பாடசாலையை தரமுயர்ததுவதற்கான அடிப்படை தேவைப்பாடுகள், உரிய ஆவணங்கள் வலயக் கல்வி அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை பரிசீலனை செய்த கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களத்தின் கட்டமைப்புக் குழுவானது, இவ்வருடம் தரம் 10 இற்கும், அடுத்த வருடம் தரம் 11 இற்கும் மாணவர்களை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக பாடுபட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் – பிரதேசவாசிகளும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்