ருசி கண்ட பூனைகள்: முன்னாள் உள்ளுராட்சித் தலைவர்களின் ‘ஜில்மல்’கள்

🕔 January 16, 2016

Corruption - 086ம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் முன்னாள் தலைவர்கள், தாம் பதவி வகித்த சபைகளின் நிருவாகச் செயற்பாடுகளில் தற்போதும் தலையீடு செய்து வருவதோடு, குறித்த சபைகள் மூலம், இன்றும் மோசடியாக உழைத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த உள்ளுராட்சி சபைகளிலுள்ள சில அதிகாரிகள், முன்னாள் தலைவர்களின் கையாட்களாக உள்ளமையினால், இந்த செயற்பாடுகள் சாத்தியமாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேற்படி முன்னாள் தலைவர்கள், தாம் பதவி வகித்த உள்ளுராட்சி சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளில் தலையீடு செய்வதோடு, உள்ளுராட்சி சபைகளிடமிருந்து அபிவிருத்தி வேலைகளைப் பெற்றுக் கொள்ளும் கொந்தராத்துக்காரர்களிடமிருந்து ‘கொமிசன்’ வாங்குவதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அந்தவகையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள முன்னாள் பிரதேச சபைத் தலைவர் ஒருவர், அவர் பதவி வகித்த பிரதேச சபையிடமிருந்து 06 அபிவிருத்தி வேலைகளைப் பெற்றுக் கொண்ட கொந்தராத்துக்காரர் ஒருவரிடமிருந்து, தலா 80 ஆயிரம் ரூபாய் வீதம் பெற்றுக் கொண்டதாகத் தெரியவருகிறது.

உள்ளுராட்சி சபைகளில் பதவி வகித்த காலங்களில், இவ்வாறான தலைவர்கள் ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் மிகத் தாராளமாக ஈடுபட்டு வந்தவர்கள் என்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

அந்தவயைில், உள்ளுராட்சி சபைகள் மூலம் – மோசடியாகச் சம்பாதித்து ருசி கண்ட இந்தப் பூனைகள், பதவியிழந்த பிறகும் விடுவதாக இல்லை.

எனவே, இந்த விவகாரங்களில் அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி  ஆணையாளர் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோர் உன்னிப்பாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்