அதாஉல்லாவுக்கு எதிரான தரப்புகள் ஒன்றிணைந்து, அக்கரைப்பற்று தேர்தல் களத்தில் குதிக்க முஸ்தீபு

🕔 January 17, 2023

– அஹமட் –

க்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தலில், நாடாளுமுன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அரசியலுக்கு எதிரான தரப்புகள் அனைத்தும் – ஒரே அணியாக இணைந்து தேர்தலில் குதிப்பதற்கான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

இது தொடர்பில் அண்மையில் அதாஉல்லாவுக்கு எதிரான அணியினரின் சந்திப்பொன்றும் நடைபெற்றது.

மு.காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகியவற்றின் அக்கரைப்பற்றிலுள்ள பிரதேச மட்டத் தலைவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் பிரதிச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் மற்றும் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் சார்பில் மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டவரும் – தற்போது ‘கிழக்கின் கேடயம்’ அமைப்பின் தலைவராகவும் உள்ள எஸ்.எம். சபீஸ் உள்ளிட்ட பலர், அண்மையில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு, ஓரணியாக தேர்தலில் குதிப்பது தொடர்பாக பேசியுள்ளனர்.

அக்கரைப்பற்றினை சொந்த இடமாகக் கொண்ட அதாஉல்லாவின் மூத்த புதல்வர், தற்போது அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராகப் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அதாஉல்லாவுடன் மிக நீண்டகாலமாக நெருக்கமாக இருந்து – அவரின் அரசியலில் பங்கெடுத்து வந்த, அக்கரைப்பற்றைச் சேர்ந்த புகாரி என்பவர், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதே சபை த் தேர்தல்களில், ஐக்கிய மக்கள் சக்தி தனியாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க அக்கரைப்பற்றில் – தனியாக களமிறங்குவது பற்றி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பின்னணியில், அதாஉல்லாவின் அரசியலுக்கு எதிரானோர் அக்கரைப்பற்றில் ஒன்றுபட்டு தேர்தலில் களமிறங்குவது தொடர்பாக, இன்றும் ஓரிரு நாட்களில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக, முன்னைய சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியொன்றின் பிரதிநிதியொருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்