சட்ட விரோதமாக 75 மில்லியன் சொத்து சேர்த்தார்: விமலுக்கு எதிரான மனு தொடர்பில், வரும் மாதம் தீர்மானம்

🕔 January 16, 2023

ட்ட விரோதமாக 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சேர்த்தார் என, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக – தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா – இல்லையா என்பது தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றம் பெப்ரவரி 28 ஆம் திகதி தனது முடிவை அறிவிக்கவுள்ளது.

இது தொடர்பான மனு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் -நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ‘அரசாங்க அதிகாரி’ என தெளிவாக வரையறுக்கப்படாததால், லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கை நடத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான ஆட்சேபனை குறித்து இருதரப்பு வழக்கறிஞர்களும் இன்று நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை சமர்ப்பித்தனர்.

இதன்மூலம், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமா?வேண்டாமா? என்பது குறித்து பெப்ரவரி 28ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச 2010 முதல் 2015 வரை அமைச்சராக இருந்த காலத்தில், சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை குவித்ததாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழு – இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்