இழப்பீடாகச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட 10 கோடி ரூபா என்னிடமில்லை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

🕔 January 15, 2023

ஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக 10 கோடி ரூபாவை செலுத்துமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தப் பணத்தை தனது நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்படி விடயத்தைக் கூறிய மைத்திரிபால; தனக்கு ஒரு லட்சம் ரூபா நட்டஈடு வழங்குவதற்குக் கூட, சொத்துக்களோ வருமானமோ இல்லை என தெரிவித்தார்.

“சட்டத்தை நான் மதிக்கிறேன். நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு நான் எப்போதும் தலைவணங்குபவன், நான் அத்தகைய இழப்பீட்டை வழங்குவதற்கு பணம் வைத்திருக்கும் நபர் அல்ல. அதனால் நானும் எனது நண்பர்களும் எங்கள் நண்பர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் தனது சொத்து விவரங்களை நாடாளுமன்றத்தில் அளித்து வருவதாகவும், யார் வேண்டுமானாலும் அதை எடுத்துக்கொண்டு தன்னிடம் இருப்பதைப் பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“கடந்த 5 ஆண்டுகளாக நான் ஜனாதிபதியாக இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் எனது சொத்து விவரத்தை அளித்து வருகிறேன். எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், எனது சொத்து விவரத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். தேவையான பணத்தைப் பெற எனது நண்பர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவேன்” என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி 10 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்