கட்டுப்பணம் பெற வேண்டாம் என உத்தரவிட்ட அமைச்சின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோரினார்

🕔 January 13, 2023

ள்ளூராரட்சி தேர்தலில் போட்டியிடவுள்டள தரப்புக்களிடமிருந்து கட்டுப்பணம் பெற வேண்டாம் என உத்தரவிட்டமைக்காக, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தேசிய தேர்தல் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

கட்டுப்பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என, மாவட்ட செயலாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த கடிதம் தொடர்பில் விசாரிப்பதற்காக பொது நிர்வாக செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானம் மற்றும் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் – தான் அந்த கடிதத்தை வழங்கியதாகவும், அது பொருத்தமற்றது என உணர்ந்ததையடுத்து, அனுப்பிய ஒரு மணித்தியாலத்துக்குள் அதனை மீளப்பெற தீர்மானித்ததாகவும் பொது நிர்வாக செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிடும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், அமைச்சரவை தீர்மானத்தை மட்டுமே நிறைவேற்றியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தை அனுப்பிய ஒரு மணி நேரத்துக்குள் அதை திரும்பப் பெற முடிவு செய்ததால், கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், மறுநாள் 131 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏதேனும் அசெளகரியங்கள் ஏற்பட்டு இருப்பின் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்