கஞ்சாவுடன் கைதான மொனராகல எஸ்.எஸ்.பி, பணியிலிருந்து இடைநிறுத்தம்

🕔 January 13, 2023

ஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி) சிசில குமார, உடன் அமுலாகும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வீட்டின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோகிராம் உலர் கஞ்சா செடிகளுடன் – மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமாரவை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடந்த 08ஆம் திகதி கைது செய்தனர்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய, அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிலவுடன், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர், மற்றுமொரு பொலிஸ் சார்ஜன்ட், மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் மொரட்டுவ எகொடயன பிரதேசத்தை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படதையடுத்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சந்தேகநபரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய, எத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் – குறித்த கஞ்சா தொகை வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதன்படி, எத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் தர்மதாஸவும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: கஞ்சா செடிகளுடன் மொனராகல எஸ்.எஸ்.பி கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்