மு.காங்கிரசின் பாலமுனை ஜனநாயக மத்திய குழுவினர் – கட்சித் தலைவர் ஹக்கீம் சந்திப்பு
– றியாஸ் ஆதம் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை ஜனநாயக மத்திய குழுவினருக்கும், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று, கட்சியின் தலமையகம் தாறுஸ்ஸலாமில் அண்மையில் நடைபெற்றது.
பாலமுனை ஜனனாயக மத்திய குழுவைச் சேர்ந்த சுமார் 60 பேர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மு.காங்கிரசின் பாலமுனை மத்திய குழு தலைவர் மற்றும் அமைப்பாளர் பதவியை வகிக்கின்ற நபரின், தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பில் வெறுப்படைந்தவர்கள் ஒன்றிணைந்து, பாலமுனை ஜனநாயக மத்திய குழுவினை உருவாக்கி செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேற்படி பாலமுனை ஜனநாயக மத்திய குழுவில், முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்கு மிக நீண்ட காலமாக உழைத்து வருகின்ற பல மூத்த உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
மு.காங்கிரஸ் தலைவருடனான மேற்படி சந்திப்பில், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் மற்றும் கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.