ஊடகவியலாளர்களை ‘நாய்’கள் எனக் கூறிய அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்: பகிரங்க மன்னிப்புக் கோராது விட்டால், ‘கசப்பான உண்மை’களைச் சந்திக்க வேண்டிவரும்

🕔 December 30, 2022

– அஹமட் –

“ஊடகவியலாளர்கள் நாய்கள், அவர்களுக்கு குரைக்க மட்டுமே தெரியும் – கதைக்கத் தெரியாது” என, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. சாபிர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து, ஊடகவியலாளர்கள் மத்தியில் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் வருட இறுதி விழா நிகழ்வில், நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றியபோது, பிரதேச செயலாளர் இதனைக் கூறியிருந்தார்.

பிரதேச செயலகத்தில் நடந்த தவறுகளை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டி எழுதியமையினை ஜீரணிக்க முடியாத நிலையில், சாபிர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆத்திரத்தின் பின்னணி

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வருட இறுதி விழாவைக் கொண்டாடும் பொருட்டு, அங்குள்ள ஊழியர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது.

இதன்போது 01 லட்சம் பேருக்கான தொழில்வாய்ப்புத் திட்டத்தின் கீழ் – வேலைவாய்ப்புப் பெற்ற பணியாளர்களிடமிருந்து 1500 ரூபா பணம் கோரப்பட்டது. குறித்த பணியாளர்கள் மாதாந்தம் 22,500 ரூபா சம்பளம் பெறும் நிலையில், அவர்களிடம் இவ்வாறு 1500 ரூபா பணம் கோரப்பட்டமை தொடர்பில், ஊடகவியலாளர்களிடம் முறையிடப்பட்டது.

இதனையடுத்து, இது குறித்து அண்மையில் ‘புதிது’ தளம் செய்தியொன்றினை வெளியிட்டது. 22,500 ரூபா சம்பளம் பெறுவோரிடம் ஒரு நிகழ்வுக்காக 1500 ரூபா பணம் அறவிடுவது மனிதாபிமானமற்ற செயல் என்பதை அந்த செய்தியில் ‘புதிது’ சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த நிலையில், தனது உரையில் ‘புதிது’ வெளியிட்ட செய்தியை சாடைமாடையாகச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதேச செயலாளர் சாபிர்; “அது ஒரு சில்லறை விடயம்” எனக் குறிப்பிட்டார். அதாவது, 22,500 ரூபா மாதச் சம்பளம் பெறும் பணியாளர்களிடம் – ஒரு நிகழ்வுக்காக சட்டவிரோதமாக 1500 ரூபா பணம் கோரப்பட்டமையினையே ‘சில்லறை விடயம்’ என பிரதேச செயலாளர் கூறினார்.

எதுகை, மோனை’ தெரியாத பிரதேச செயலாளர்

இந்த ஆத்திரத்தை மனதில் வைத்துப் பேசிய பிரதேச செயலாளர் சாபிர்; “ஊடகவியலாளர்கள் காவல் நாய்கள் என்று, ஒரு மேலைத்தேய அறிஞர் சொல்கிறார். ஒரு களவு நடந்தால் நாய் குரைக்கும். அதைத்தான் அவர்கள் செய்வார்களே தவிர, அவர்களுக்கு வேறெதுவும் தெரியாது” எனவும் கூறினார்.

உண்மையில், ‘ஊடகங்கள் சமூகத்தின் காவல் நாய்கள்’ என்றுதான் ஊடகவியலில் கூறப்படுகிறதே தவிர, ஊடகவியலாளர்களை நாய்கள் என, எந்த மேலைத்தேய அறிஞரும் கூறவில்லை. ஊடகவியலாளர்கள் மீது கொண்ட ஆத்திரத்தின் காரணமாக – பிரதேச செயலாளர் சாபிர், ‘எதுகை – மோனை’ தெரியாமல் உளறிக் கொட்டிவிட்டமையை புரிந்து கொள்ள முடிகிறது.

ஊடகவிளலாளர்களுக்கு குரைக்க மட்டும்தான் தெரியுமா?

உலகில் நடக்கும் பல்வேறு ஊழல், மோசடிகளை சமூகத்தின் பிரதிநிதிகளாக இருந்து ஊடகவியலாளர்களே அம்பலப்படுத்தியிருக்கின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலும் பல்வேறு மோசடிகளை ஆதாரத்துடன் ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளமையினையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

அது மாத்திரமன்றி, உயர் பதவிகளில் இருக்கும் பல அரச உத்தியோகத்தர்களின் அந்தரங்கமான விடயங்கள் ஊடகவியலாளர்களிடம் சிக்கியபோது, அவற்றினை ஊடகவியலாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் வெளியிடாமல் தவிர்த்திருக்கிறார்கள், பலரின் நிர்வாணங்களை ஊடகவியலாளர்கள் மறைந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் பிரதேச செயலாளர் சாபிர் அறியாதவை அல்ல.

உதாரணமாக சில காலங்களுக்கு முன்னர் ஒலுவில் – கட்டார் சிற்றி பகுதியிலுள்ள ஒரு கும்பலிடம் தமது அந்தரங்கத்தையும் பணத்தையும் பறிகொடுத்த – அரச உயர் பதவியிலுள்ள பலரின் நிர்வாணப் படங்கள் ஊடகவியலாளர்களிடம் சிக்கியபோது, அவற்றினை மனிதாபிமான அடிப்படையில் – ஊடகவியலாளர்கள் வெளியிடாமல் தவிர்த்திருந்தார்கள் என்பதையும் இங்கு குறித்துச் சொல்ல வேண்டியுள்ளது.

மன்னிப்புக் கோரியே ஆக வேண்டும்

ஊடகவியலாளர்களை ‘நாய்கள்’ என்றும், அவர்களுக்கு ‘குரைக்க மட்டுமே தெரியும்’ என்றும் கூறிய பிரதேச செயலாளர் சாபிர், அவ்வாறு கூறியமைக்காக – பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என, ஊடகவியலாளர்கள் சார்பாக ‘புதிது’ செய்தித்தளம் கோருகிறது.

அதனை செய்வதற்கு பிரதேச செயலாளர் சாபிர் தவறுவாராக இருந்தால், பிரதேச செயலாளர் சாபிருடைய கருத்தைக் கண்டிக்கும் வகையில், ஊடகவியலாளர்கள் களத்தில் இறங்க வேண்டியேற்படும் என்பதையும் இங்கு குறிப்பிடுகின்றோம்.

மேலும், ஊடகவியலாளர்கள் மனிதாபிமான ரீதியில் வெளியிடாமாமல் வைத்திருக்கும் சில கசப்பான உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டியேற்படும் என்பதையும் இங்கு ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

பிரதேச செயலாளரின் உரை

இந்தச் செய்திகளையும் படியுங்கள்:

01) அட்டாளைச்சேனை பிரதேச செயலக பணியாளர்களிடம், ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்துக்காக பெருந்தொகை பணம் கோரப்படுவதாக புகார்

02) ஆபாசமாகப் பேசி நிர்வாணப் படம் பெற்று, பணம் பறித்த கும்பல்: அம்பாறை மாவட்டத்தில் அதிரடிக் கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்