அட்டாளைச்சேனையில் பௌத்த சின்னங்கள் அழிக்கப்படுவதாக, ஞானசார தேரரிடம் முறையிட்ட பௌசான்: விளக்க மறியல் ஆசாமியின், அம்பலமாகும் ‘கூத்து’க்கள்

🕔 December 26, 2022

– அஹமட் –

பெண் ஒருவரின் படங்களை ‘பேஸ்புக்’ இல் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி, பணம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆசாமி பௌசான் என்பவர், ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி முன்னிலையில், அவரின் சொந்த ஊருக்கு எதிராக சாட்சியம் வழங்கியமை தெரியவந்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தலைமையில், கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்தில் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி உருவாக்கப்பட்டது.

முஸ்லிம்களுக்கென நடைமுறையில் உள்ள திருமண – விவாகரத்துச் சட்டம் உள்ளிட்ட பல பிரத்தியேக விடயங்களை இல்லாமல் செய்வதற்காகவே இந்த செயலணி உருவாக்கப்பட்டதாக, முஸ்லிம்கள் தரப்பில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த ஆணைக்குழு முன்பாக சில காலங்களுக்கு முன்னர் ஆஜராகி, அட்டாளைச்சேனை மக்களுக்கும், அந்த ஊருக்கும் எதிராக பௌசான் என்பவர் சாட்சியமளித்துள்ளார்.

அட்டாளைச்சேனையில் பௌத்த புனித பொருட்கள் அழிக்கப்படுகின்றன என்றும், அட்டாளைச்சேனை கரைச்சைப் பகுதியிலுள்ள காணிகளை – அங்குள்ள மக்கள் சட்டவிரோதமாக மண்ணிட்டு நிரப்புகிறார்கள் எனவும் பல விடயங்களை குறிப்பிட்டு, ஞானசார தேரர் தலைமையிலான செயலணி முன்பாக பௌசான் என்பவர் சாட்சியமளித்துள்ளார்.

தனது ஊரில் ஆங்காங்கே தானாக முளைக்கும் மிகச் சிறிய அரச மரங்களை இவர் படம் பிடித்துக் கொண்டு, பின்னர் அந்த மரங்கள் இயற்கையாகவே அழிவடைந்து போகும்போது, அந்த இடத்தையும் படம் பிடித்துக் கொள்ளும் இவர், ‘குறித்த இடத்தில் இருந்த அரச மரம், அதாவது பௌத்த சின்னம் அழிக்கப்பட்டு விட்டதாக’த் தெரிவித்து, அவரின் ‘பேஸ்புக்’கில் பல தடவை பதிவிட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

இந்த விடயத்தையே, இவர் ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி முன்பாகச் சென்று, அட்டாளைச்சேனையில் பௌத்த சின்னங்கள் அழிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

மேற்படி பௌசான் எனும் ஆசாமி பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பெண் ஒருவரின் படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிடப் போவதாக மிரட்டி – பணம் பறித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்பான செய்திகள்:

01) பெண்ணின் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, பணம் பறித்த அட்டாளைச்சேனை ஆசாமிக்கு விளக்க மறியல்

02) கணவர் வெளிநாட்டிலுள்ள வீடுகளுக்கு, பெண்கள் தனியாக இருக்கும் நேரம் பார்த்துச் சென்றார் பௌசான்: விளக்க மறியல் ஆசாமி தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலம்

03) அரச ஊழியர்களை அச்சுறுத்தியமை, அவதூறு எழுதியமை உள்ளிட்ட பல குற்றங்கள்: விளக்க மறியல் ஆசாமி பௌசானுக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்