அரச ஊழியர்களை அச்சுறுத்தியமை, அவதூறு எழுதியமை உள்ளிட்ட பல குற்றங்கள்: விளக்க மறியல் ஆசாமி பௌசானுக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள்

🕔 December 23, 2022

– அஹமட் –

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவர், அரச ஊழியர்களை அச்சுறுத்தியமை, சமூக ஊடகத்தில் மற்றவர்களுக்கு அவதூறு எழுதியமை தொடர்பிலும், பல வழக்குகளை எதிர்கொண்டு வருவதாக – ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது.

குறித்த ஆசாமி, அட்டாளைச்சேனை கமநல நிலையத்தில் கமநல அதிகாரியாக கடமையாற்றிய ஏ.எல். அஷ்ரப் என்பவரை அவமானப்படுத்தும் வகையில் ‘பேஸ்புக்’கில் அவதூறு எழுதியமைக்காக, மான நஷ்ட வழக்கு ஒன்றையும் எதிர்கொண்டு வருகின்றார்.

அட்டாளைச்சேனை கமநல நிலையத்தில் – தான் பணியாற்றிய போது, பௌசான் என்பவர் தன்னை அவமானப்படுத்தும் வகையில் ‘பேஸ்புக்’கில் எழுதியதாகவும், அதன்பொருட்டு அவருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு ஒன்றினை 2021ஆம் ஆண்டு – தான் தாக்கல் செய்ததாகவும், கமநல அதிகாரி அஷ்ரப் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார்.

அந்த வழக்குக்கு முன்னதாக – தனது சட்டத்தரணி ஊடாக, பௌசான் என்பவருக்கு 03 மில்லியன் ரூபா மான நஷ்டஈடு கோரி – தான் கோரிக்கைக் கடிதம் (Letter of demand) ஒன்றை 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.

அட்டாளைச்சேனை கமநல நிலையத்தில் – தான் கமநல அதிகாரியாகக் கடமையாற்றிய காலப்பகுதியில், தமது அலுவலகத்துக்கு பௌசான் என்பவர் வந்து, அங்கிருந்த பணியாளர்களை அச்சுறுத்தி மிரட்டியதாகவும், அது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் 02/10/2020 அன்று தாம் முறைப்பாடு ஒன்றைச் செய்ததாகவும் அஷ்ரப் மேலும் குறிப்பிட்டார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் – பௌசான் என்பவருக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸார் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவை தவிர, தன்னை அவமானப்படுத்தும் வகையில் ‘பேஸ்புக்’கில் பௌசான் எனும் மேற்படி ஆசாமி -அசிங்கமாக அவதூறுகளை தொடர்ச்சியாக எழுதி வந்ததாகவும், அதற்கு எதிராக இணையக் குற்ற பொலிஸ் பிரிவில் (Cyber crime division) 09 செப்டம்பர் 2020 அன்று, தான் முறைப்பாடு செய்ததாகவும் அஷ்ரப் தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக பிரமுகர்களை அவமானப்படுத்தும் வகையில் மேற்படி பௌசான் என்பவர், தொடர்ச்சியாக அவதூறுகளை எழுதி வந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக இன்னும் பலர் – பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

தற்போது இந்த ஆசாமி – பெண் ஒருவரின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி மிரட்டி, அவரிடம் 05 லட்சம் ரூபா பணம் பறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கணவர் வெளிநாட்டிலுள்ள வீடுகளுக்கு, பெண்கள் தனியாக இருக்கும் நேரம் பார்த்துச் சென்றார் பௌசான்: விளக்க மறியல் ஆசாமி தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்