அழுக்கு மண்ணை கொட்டுவதால், மேலும் மோசமடையும் அட்டாளைச்சேனை தபாலக பின் வீதி: பிரதேச சபை கவனிக்குமா?

🕔 December 22, 2022

– முன்ஸிப் –

ட்டாளைச்சேனை தபாலக பின் வீதி ( புறத்தோட்டம் வீதி) மிக மோசமான நிலையில் காணப்படும் அதேவேளை, அவ்வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தமைக்காக, வடிகான்களில் இருந்து அகற்றப்படும் மண்ணை இந்த வீதியில் பிரதேச சபையினர் கொட்டி வருவதால், வீதி மேலும் மோசமடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி தபாலக பின் வீதி 50 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பபட்டதாகவும், இன்னும் அது – கிறவல் வீதியாகவே உள்ளதாகவும் அங்குள்ள குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வீதி மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுவதால், இதனை புனரமைத்துத் தருமாறு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்திடம் எழுத்து மூலம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனையடுத்து, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரை தொலைபேசி மூலமாக அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர் ஒருவர் தொடர்பு கொண்டு, குறித்த வீதியின் நிலை காரணமாக தாம் எதிர் கொள்ளும் கஷ்டங்கள் குறித்து எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சில வாரங்களாக, வடிகான்களில் இருந்து அகற்றப்படும் மோசமான, அழுக்குகள் நிறைந்த மண்ணை – பிரதேச சபையினர் இந்த வீதியில் கொட்டுவதாகவும், இதனால் வீதி இன்னும் மோசமடைந்துள்ளதாகவும் அங்குள்ள குடியிருப்பாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார்.

இந்த வீதியில் கொட்டிக் கலைக்கப்பட்டுள்ள – வடிகான்களில் இருந்து அகற்றிய மணில் உடைந்த கண்ணாடிகள், ஆபத்தான பொருட்கள் மற்றும் அழுகிய விலங்கு கழிவுகள் காணப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அநேகமான இடங்களில் – உள் வீதிகளே காபட் வீதிகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், 50 வருடங்களாக ஒரு வீதி – எவ்வித புனர் நிர்மாணங்களும் இல்லாமல் உள்ளமை கவலைக்குரியதாகும் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

எனவே, இது தொடர்பில் பிரதேச சபை உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்