கணவர் வெளிநாட்டிலுள்ள வீடுகளுக்கு, பெண்கள் தனியாக இருக்கும் நேரம் பார்த்துச் சென்றார் பௌசான்: விளக்க மறியல் ஆசாமி தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலம்

🕔 December 22, 2022

– அஹமட் –

பெண்ணொருவரை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் எனும் நபர், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்கிற விடயம் தற்போது வெளிப்பட்டு வருகின்றது.

‘புதிது’ செய்தித்தளத்தை தொடர்பு கொண்ட சிலர், பௌசான் என்பவர் தொடர்பில் ஆதாரபூர்வமான ஆவணங்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த வகையில், மேற்படி பௌசான் என்பவர், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கணவர் வெளிநாடு சென்றுள்ள வீடுகளுக்கு, பெண்கள் தனிமையில் இருக்கும் நேரம் பார்த்துச் சென்று, அவர்களிடம் தேவையற்ற விதத்தில் அவர்களின் கணவர் தொடர்பில் விசாரித்துள்ளதாகவும், இதனால் குற்றச் செயல்கள் மற்றும் பாலியல் வன்முறைகள் நடைபெறலாம் எனவும் தெரிவித்து, 25 கிராம உத்தியோகத்தர்கள் கையொப்பத்துடன் 2019ஆம் ஆண்டு எழுத்து மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் ஊடாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்தப் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை அப்போதைய பிரதேச செயலாளர் – பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லவில்லை என, அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள கிராம உத்தியோகத்தர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

மேலும், பௌசான் எனும் மேற்படி நபர், கிராம உத்தியோகத்தர்களைச் சந்தித்து பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கோரி, கிராம உத்தியோகத்தர்களை மிரட்டியதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி, அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வீடுகளுக்குச் சென்று, அங்குள்ளவர்களின் தனிப்பட்ட ஆவணங்களை கிராம உத்தியோகத்தர்கள் கேட்டதாக வாங்கிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தமது அரச கடமையை செய்வதற்கு மேற்படி நபர் குந்தகம் ஏற்படுத்துவதாகவும் 25 கிராம உத்தியோகத்தர்கள் கையெழுத்திட்ட அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேற்படி பௌசான் என்பவர் வழக்கு ஒன்றில் தண்டனை அனுபவித்தவர் என்றும், சில வழக்குகளில் பிணையில் விடப்பட்டவர் என்றும் அந்தக் கடிதத்தில் கிராம உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் முறைப்பாட்டை கிராம உத்தியோகத்தர்கள் வழங்கிய காலப்பகுதியில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக ஜே. லியாகத் அலி பதவி வகித்தார்.

தொடர்பான செய்தி: பெண்ணின் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, பணம் பறித்த அட்டாளைச்சேனை ஆசாமிக்கு விளக்க மறியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்