உள்ளூராட்சி தேர்தலுக்கு நாங்கள் தயார், ஆனால் 20 பில்லியன் ரூபா செலவாகும்: அமைச்சர் பிரசன்ன

🕔 December 21, 2022

– முனீரா அபூபக்கர்-

ள்ளூராட்சி தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயார் என்று, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமை்சர் இன்று கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் அழைக்கப்பட்டு, திட்டம் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என்றும் இதன்போது அவர் கூறினார்.

நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளதால், இந்த நேரத்தில் தேர்தலை நடத்த ரூபாய் 20 பில்லியன் செலவழிக்கப்படும் என்றும், மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இருந்தபோதும் தேர்தல் தள்ளிப்போனால், தேர்தலை ஒத்திவைத்த குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் பொறுப்பாக வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

“கட்சி என்ற ரீதியில் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் எமக்கு இல்லை. கம்பஹா மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களையும அழைத்து தேர்தல் வேலைத்திட்டம் தயார் செய்யப்பட்டு, அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக உள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதாக பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர். இதை 50 சதவீதமாகக் குறைத்து – செலவுகளையும் குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

இந்த நிலைமை நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது. இப்போது உள்ளூராட்சி சபைகளில் வேலை செய்வதற்கு போதுமான இடம் இல்லை. எனவே, உள்ளூராட்சி உறுப்பினர்கள் இதை விட அதிகம் குறைவாக இருந்தால் நல்லது என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.

மேல் மாகாண சபையின் உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சராக நான் பணியாற்றினேன். அந்த அனுபவத்துடன் பேசுகிறேன். உள்ளூராட்சி சபை தேர்தல் பழைய முறையில் நடத்தினால் அதற்கும் தயாராக இருக்கிறோம். தற்போதைய முறைப்படி நடத்தினால் அதற்கும் தயாராக இருக்கிறோம்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு கட்சியாக நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தற்போதுள்ள இந்த அமைப்பில் பணக்காரர்களும் போதைக்கு அடிமையானவர்களும் பணத்தை செலவளித்து தேர்தலுக்கு வர முடியும். ஆனால் ஒரு சாதாரண மனிதனுக்கு தேர்தலில் போட்டியியிட பல தடைகள் உள்ளன. அதனால் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். அனைத்து தேர்தல் முறைகளிலும் மாற்றம் வர வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்