பெண்ணின் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, பணம் பறித்த அட்டாளைச்சேனை ஆசாமிக்கு விளக்க மறியல்

🕔 December 21, 2022

– அஹமட் –

பெண் ஒருவரின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி, அவரிடமிருந்து 05 லட்சம் ரூபா பணம் பறித்ததோடு, மேலும் 15 லட்சம் ரூபா கேட்டு மிரட்டிய அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நபரொருவரை, 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு, சம்மாந்துதுறை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் எனும் நபருக்கே இவ்வாறு விளக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய, இவர் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

காரைதீவு பொலிஸ் நிலைய – பதில் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். அஸீம் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைவாக, மேற்படி நபர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

நடந்தது என்ன?

காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றினைச் சேர்ந்த பெண் ஒருவரை, திருமணம் முடிப்பதாகக் கூறி – அவருடனும், அவரின் வீட்டாருடனும் பழகி வந்த மேற்படி பௌசான் எனும் ஆசாமி, அந்தப் பெண்ணை படம் பிடித்து வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் குறித்த நபர் – ஒரு மோசடிப் பேர்வழி என்பதை அறிந்து கொண்ட அந்தப் பெண், அவரைத் திருமணம் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்திய பௌசான் என்பவர், அப்படிச் செய்யாமல் விடுவதென்றால் 05 லட்சம் ரூபா பணம் வழங்க வேண்டுமென மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, பௌசான் என்பவர் கேட்டு மிரட்டிய 05 லட்சம் ரூபாவை அவருக்கு வழங்கியதாக, காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் தரப்பு செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

இந்த சம்பவத்தை அடுத்து, மீண்டும் அந்தப் பெண்ணிடம் 15 லட்சம் ரூபா பணம் கேட்டுள்ள அந்த ஆசாமி, இல்லையென்றால் அந்தப் பெண்ணின் படங்களை வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதன் பின்னரே, அந்தப் பெண் தரப்பில் – காரைதீவு பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, காரைதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அஸீம் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைவாக, மோசடி நபர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கைப்பேசியில் படங்கள்   

குறித்த நபரை கைது செய்த பொலிஸார், அவரின் கைத்தொலைபேசியைக் கைப்பற்றினர். அந்தக் கைப்பேசியில் குறித்த பெண்ணின் படங்கள் இருந்ததாக தெரியவருகிறது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நபரின் சில பொருட்கள் கொழும்பில் ஓரிடத்தில் உள்ளதாகவும், அந்தப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிய வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பில், பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸாரிடமும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நபர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பல்வேறு நபர்களுக்கும் அவதூறு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை (Hate speech) எழுதி, அச்சுறுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் இருந்த படங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்