இலங்கை விடயத்தில், தவறை ஒப்புக்கொண்டார் கமல்ஹாசன்: தெரியவில்லையா? மறந்து விட்டாரா?

🕔 December 19, 2022

“உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்” என, கடந்த வாரம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், அதன் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த பிழையான தகவலை, நேற்றைய (18) நிகழ்ச்சியில் அவர் திருத்திக் கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபாரப்பாகும் ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 6’ நிகழ்ச்சியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் போட்டியாளர்களைச் சந்தித்து கமல்ஹாசன் பேசினார்.

அப்போது ‘பிக்பாஸ்’ வீட்டிலுள்ள போட்டியாளர்களிடம் கடந்த வாரம் கேட்கப்பட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு, அவர்கள் வழங்கிய பிழையான பதில்களை அவர் நினைவுபடுத்தி நகைச்சுவையாகப் பேசினார்.

இதன்போது ஒரு கட்டத்தில், உலகின் பெண் பிரதமர் தொடர்பாக, தான் கடந்த வாரம் தெரிவித்த பிழையான தகவல் பற்றியும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.   

“எனக்கே கூட பிழைகள் நேரும். அவற்றைச் சுட்டிக் காட்டும் போது மறுத்துப் பேசாமல், உடனடியாக ஒத்துக் கொள்வது சிறப்பு. ஏனென்றால் அது நம்மை மேம்படுத்தும்” என அப்போது கமல் கூறினார்.  

“இங்கே பேசிக் கொண்டிருக்கும் போது, உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்று, இந்திரா காந்தியைச் சொல்லி விட்டேன். அதன்பிறகு எனக்கு திருத்தம் சொல்லி பல பேர் செய்தியனுப்பினார்கள். சமூக ஊடகங்களில் நிறையப்பேர் சொன்னார்கள். உலகின் முதல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க என்பது எனக்கு தெரியாமல் போனமைக்கு வயதுதான் காரணம்”.

“எனக்கு அரசியலில் சின்னப் புரிதல் வரும் நேரத்தில் அந்த வரலாற்றை மறந்துவிட்டேன். என் நாட்டு பிரதமர் பற்றி பேச வேண்டுமென்று, பக்கத்து ‘தங்கச்சி’ நாட்டை மறந்து விட்டேன். அது ஒரு நினைவுப் பிழைதான்” என்றார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; “நான் செய்த அந்தத் தவறு காரணமாக, சில பெண் தலைவிகள் பற்றி – சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் நடந்தன. அடுத்த தலைமுறை என்னைப் போல் இவ்வாறு மறதியில் தவறு செய்யாமலிருக்க அது உதவும்” என்றார்.

நடந்த தவறு என்ன?

‘உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்’ என, கடந்த வாரம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து, அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசிய கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

பெண் விடுதலை தொடர்பாக பாரதியின் செயற்பாடுகள் குறித்து, அந்த நிகழ்ச்சியில் சிலாகித்த கமல்ஹாசன், ”பாரதி வெறும் வாய்ப்பேச்சில் வீரம் பேசாமல் ‘சக்கரவர்த்தினி’ என்ற ஒரு பத்திரிகையைத் துவங்கி – நடத்தி, அதில் பெண்களைக் கொண்டு எழுத வைத்தார்” என்று கூறியதோடு, “உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்பதை இந்தியாதான் செய்தது” என்றார்.  

ஆனால் கமல்ஹாசன் தெரிவித்த அந்த தகவல் பிழையானது. உலகின் முதல் பெண் பிரதமரைப் பெற்றுக் கொண்ட பெருமை இலங்கைக்குரியதாகும். இலங்கையின் முதல் பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு தெரிவான சிறிமாவோ பண்டாரநாயக்க, ‘உலகின் முதல் பெண் பிரதமர்’ எனும் சிறப்பையும் பெற்றார்.

தெரியவில்லையா? மறந்து விட்டாரா?

நடிகர் கமல்ஹாசன் கடந்தவாரம் பேசும் போது இந்திரா காந்தியின் பெயரைக் குறிப்பிடவில்லை. என்றாலும், அவர் இந்திராவை மனதில் வைத்தே அந்தத் தகவலைக் கூறியிருந்தார்.

இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமராவார். அவருக்குப் பின்னர் எந்தவொரு பெண்ணும் இந்தியப் பிரதமர் பதவியை இதுவரை வகிக்கவில்லை.

எது எவ்வாறாயினும், ‘உலகின் முதல் பெண் பிரதமர் யார்’ எனும் தகவலை கமல் பிழையாக கூறினாரா? அல்லது மறந்து தவறாகப் பதிவு செய்தாரா என்பதை அவர் நேற்றைய நிகழ்ச்சியில் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் இந்திரா காந்தி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்