போலி கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்து, பொலிஸ் சேவையில் இணைந்தவர் சிக்கினார்

🕔 December 15, 2022

போலியான கல்விச் சான்றிதழைச் சமர்ப்பித்து பொலிஸ் சேவையில் இணைந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர், நேற்று முன்தினம் (13) கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டார்.

சாவகச்சேரி பொலிஸில் கடமையாற்றும் மேற்படி பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு, கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் 2020ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்தார்.

க.பொ.த சா/த கணித பாடத்தில் சித்தியடையாத இவர், அந்தச் சான்றிதழை போலியாக தயாரித்து பொலிஸ் பணியில் இணைந்து கொண்டுள்ளதாக மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இவர் 2012 ஆம் ஆண்டு க.பொ.த சா/த பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்.

இவரின் சான்றிதழ்கள் போலியானவை என தெரியவரும் போது அவர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

கல்விச் சான்றிதழ் போலியானது எனத் தெரியவந்த கடந்த ஜூன் மாதம் தொடக்கம், அவர் பணிக்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, அவரை ஜூன் 23ம் திகதி தொடக்கம் பதவியில் இருந்து நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்