‘ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா’வில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: ஆட்சேபித்ததாக மூத்த ஊடகவியலாளர் அமீன் தெரிவிப்பு

🕔 December 14, 2022
நேற்றைய விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த ஊடகவியலாளர்கள்

– மரிக்கார் –

லங்கை பத்திரிகை ஸ்தாபனம் நடத்திய 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளா்களுக்கான விருது வழங்கும் விழாவில், முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஊடகவியலாளா்களுக்கான மேற்படி விருது வழங்கும் விழா, இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் தலைமையில் நேற்று (13) மௌன்ட்லவினியா பீச் ஹோட்டலில் நடைபெற்றது.

இதன் போது மூத்த ஊடகவியலாளர்கள் ஐவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட போதிலும், அவர்களில் முஸ்லிம் ஊடகவியலாளர் எவரும் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கள சமூகத்திலிருந்து நால்வரும், தமிழர் ஒருவரும் இம்முறை ஊடகத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களாக இவ் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கலில், முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக, தமது ஆட்சேபனைய, இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் முக்கியஸ்தர்களின் கவனத்துக்கு கொண்டு வந்ததாக, மூத்த ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் முன்னாள் தலைவருமான என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில் – குறித்த விழாவில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் அமீன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக ஊடகத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்காக முஸ்லிம் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என, ஊடகவியலாளர் அஷ்ரப் சமத் – பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வழங்கும் சிறந்த ஊடகவியலாளர் விருது தொடர்பிலும் – பல்வேறு விமர்சனங்கள் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்