இலங்கையின் பெருமையை ‘தட்டிப் பறித்த’ கமல்ஹாசன்: பிக் பொஸ் நிகழ்சியில் நடந்த தவறு

🕔 December 13, 2022

‘உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்’ எனும் தகவல் பிழையொன்றினை ஞாயிற்றுக்கிழமை இரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து பேசிய கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர் என்று குறிப்பிட்டார்.

‘பிக் பொஸ்’ சீசன் – 6 தொடரை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 11ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண்களின் விடுதலை குறித்து பாரதி எழுதிய மற்றும் ஆசைப்பட்ட விடயங்களை மேற்கோள்காட்டும்போது உலகின் முதல் பெண் பிரதமர் ஒரு இந்தியர் என்றவாறு பேசினார்.

“பெண்ணுக்கு விடுதலை கிடைத்தால்தான், மண்ணுக்கு விடுதலை கிடைக்கும்,” என்று சொன்ன கமல், “வெறும் வாய்ப்பேச்சில் வீரம் பேசாமல் ‘சக்கரவர்த்தினி’ என்ற ஒரு பத்திரிகையை தொடங்கி அதில் பெண்களையும் எழுத வைத்தார் பாரதி” என்று கமல் கூறினார்.

தவறான தகவல்

கமல்ஹாசன் தெரிவித்த இந்த தகவல் தவறானது. உலகிலேயே முதல் பெண் பிரதமரை கொண்ட பெருமை இலங்கைக்குரியதாகும்.

இலங்கையின் முதலாவது பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்க தேர்வு செய்யப்பட்டார். அதன் மூலம், ‘உலகின் முதல் பெண் பிரதமர்’ எனும் பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

சிறிமாவோ பண்டார நாயக்க – இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டார நாயக்கவின் மனைவி. சிறிமாவின் மகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

பிரதமர் பண்டாரநாயக்க 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி, தல்துவே சோமராம எனும் பௌத்த பிக்குவினால் சுடப்பட்டு, அதனால் ஏற்பட்ட காயம் காரணமாக மறுநாள் உயிரிழந்தார். அவரை கொன்ற நபருக்கு பின்னாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்டார்.

சிறிமாவின் அரசியல்

கணவரின் மரணத்தை அடுத்து அரசியலுக்குள் நுழைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க – பிரமதராக தேர்வானார். அந்த வகையில்தான் அவருக்கு ‘உலகின் முதலாவது பெண் பிரதமர்’ எனும் பெருமை கிடைத்தது.

சிறிமாவோ பண்டார நாயக்க, 1960, 1970 மற்றும் 1994 என மூன்று முறை இலங்கை பிரதமராக பதவி வகித்தார். இறுதியாக தனது மகள் சந்திரிக்கா ஜனாதிபதியாக நாட்டை வழிநடத்திய போது, அந்த அரசாங்கத்தில் தாயார் சிறிமா பிரதமராக இருந்தார்.

தனது கணவர் ஆரம்பித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பொறுப்பை, கணவரின் மரணத்தின் பின்னர் ஏற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க, இரண்டு தடவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

1977ஆம் ஆண்டு சிறிமாவின் சுதந்திர கட்சி தோல்வியடைந்த நிலையில், அப்போது பதவிக்கு வந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கம், ஊழல் குற்றச்சாட்டுகளை சிறிமாவோ பண்டாரநாயக்க மீது சுமத்தி அவரின் குடியுரிமையைப் பறித்தது.

இதன் காரணமாக ஏழு வருடங்களுக்கும் மேலாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலை சிறிமாவுக்கு ஏற்பட்டது. 

சிறிமாவோ பண்டார நாயக்க – தமது மரணம் வரை அரசியலில் ஈடுபட்டார். 2010ஆம் ஆண்டில் அவர் காலமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர்கூட, அப்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் வாக்களித்து விட்டுச் சென்றிருந்தார்.

கமல் என்ன நினைத்திருப்பார்?

கமல்ஹாசன் நல்ல வாசகர். உலக விடயங்களை பரந்தளவில் அறிந்து வைத்திருப்பவர். அவ்வாறான ஒருவர் வெளியிடும் தகவல்கள் மக்களிடம் உடனடியாகவும், உறுதியாகவும் போய்ச் சேர்ந்து விடும்.

ஒருவேளை இந்தியாவின் முதலாவது பெண் பிரதமரான இந்திரா காங்தியை மனதில் வைத்துக் கொண்டு, ‘உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்’ என்று, கமலஹாசன் கூறியிருக்கக் கூடும்.

இந்திய பிரதமராக இந்திரா காந்தி 1966ஆம் ஆண்டில் பதவியேற்றார். அதாவது, சிறிமாவோ, இலங்கை பிரதமராக தேர்வான 6 வருடங்களுக்குப் பிறகே இந்திரா, இந்தியாவின் பிரதமர் ஆனார்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்