மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி; மாவட்டங்களுக்கு இடையில் விநியோகிப்பது இடைநிறுத்தம்: ஜனாதிபதி உத்தரவு

🕔 December 10, 2022

மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றை மாகாணம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் விநியோகிப்பது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டது.

பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு இதனை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் நேற்றும், நேற்றுமுன்தினமும் (08, 09) மாடுகள், எருமைகள், ஆடுகள் திடீரென உயிரிழந்தமையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கை பொலிஸாரும், தொடர்புடைய அதிகாரிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் பணித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களில், வடக்கு மாகாணத்தில் 358 மாடுகளும் 191 ஆடுகளும் உயிரிழந்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 444 மாடுகளும் 34 எருமைகளும் 65 ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது வடக்கு, கிழக்கு கால்நடை வைத்தியர்கள் அந்தந்த இடங்களுக்குச் சென்று கால்நடைகளுக்குத் தேவையான சுகாதார வசதிகளை வழங்கி வருவதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல கூறியுள்ளார்.

முதற்கட்டமாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட கால்நடை புலனாய்வு நிலையங்கள் ஊடாக கால்நடை புலனாய்வு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், நாட்டில் தற்போது நிலவுகின்ற கடும் குளிர் காலநிலையினால் ஏற்பட்ட திடீர் அதிர்ச்சியினால் இந்த விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று அவர்கள் அனுமானித்துள்ளதாகவும் ஹேமாலி கொத்தலாவல மேலும் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தலையிட்டு ஆய்வுகூட விசாரணைகளை இன்று (10) ஆரம்பித்ததுடன், அதன்படி, பேராதனை தலைமையகத்தின் கால்நடை விசாரணை அதிகாரிகள் இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து இறந்த விலங்குகளின் மாதிரிகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கால்நடை மாதிரிகள் இன்றும் நாளையும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வக விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும் ஹேமாலி கொத்தலாவல மேலும் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் வரை மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்