சிறுநீரக மோசடி; தரகராகச் செயற்பட்ட 41 வயது நபர் கைது

🕔 December 6, 2022

ராஜகிரியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உறுப்பு மோசடியின் பிரதான தரகர் என தெரிவிக்கப்படும் 41 வயதுடைய நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (05) மாலை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு புகாரளிக்கப்பட்டமையினை அடுத்து, கொழும்பு 15, காஜிமாவத்தையில் வசிக்கும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மனித உறுப்பு மோசடி தொடர்பாக இதில் சிக்கிய பெண் ஒருவர் உட்பட ஐவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முக்கியமாக சிறுநீரகங்களைப் பெறுவதற்காக வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த நபர்களை குறிவைத்து இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒப்புக் கொள்ளப்பட்ட தொகை, சிறுநீரகங்களை வழங்கியோருக்கு செலுத்தவில்லை என்பதும் தெரியவந்தது.

சிறுநீரகங்களை வழங்குபவர்களுக்கும் உறுப்புகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கும் இடையில் கைது செய்யப்பட்டவர் தரகராகச் செயற்பட்டு, பெறுநரிடமிருந்து தரகுப் பணத்தைப் பெற்றுக்கொண்ட அதேவேளை, சிறுநீரகங்களை வழங்குபவர்களிடமிருந்தும் ஒரு தொகையை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்த பின்னர், இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவு தொடரவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்