மன நோயை உண்டாக்கும் ‘ஐஸ்’ போதைப் பொருள்: வேறு என்னவெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியுமா?

🕔 December 1, 2022

– யூ.எல். மப்றூக் –

ஸ்’ போதைப் பொருள் தொடர்பான குற்றத்துக்காக இலங்கையில் மரண தண்டனை விதிக்கும் வகையில் அண்மையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறித்து அறிவீர்கள்.

அந்த வகையில், 05 கிராம் ஐஸ் போதைப் பொருளை ஒருவர் தம்வசம் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

2022ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டம்’ எனும் பெயரில், மேற்படி தண்டனைக்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஐஸ் போதைப் பொருள் என்றால் என்ன? அது என்ன வகையான தாக்கங்களையெல்லாம் ஏற்படுத்தும் என்பன போன்ற விடயங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பிபிசி தமிழுக்காக அண்மையில் யூ.எல். மப்றூக் எழுதிய கட்டுரையொன்றை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

‘ஐஸ்’ போதைப் பொருள் என்றால் என்ன?

‘மெத்தம்பெட்டமைன்’ (Methamphetamine) என்பதே ‘ஐஸ்’ எனும் போதைப்பொருளாக அறியப்படுகிறது. இது நூறு வீதம் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்ற (Synthetic) போதைப் பொருள் என்கிறார் தேசிய அபாயகர அவுடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட்.

இது படிகங்களாக (Crystals) காணப்படுகின்ற கலப்படமற்ற போதைப்பொருள் எனவும் அவர் கூறுகின்றார். “ஐஸ் போதைப்பொருளை ஒரு தடவை உள்ளெடுத்தால், அந்த நபரை அது அடிமையாக்கி விடும்” என்றும், “பாவித்து 48 மணித்தியாலங்களுக்கு அதன் செயற்பாடு உடலில் இருக்கும்” எனவும் தெரிவிக்கின்றார்.

இதை அதிகளவு உள்ளெடுத்தால், மரணம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஐஸ் போதைப்பொருளை உள்ளெடுக்கும் நபர்களிடம், எவ்வித அறிகுறிகளையும் பெரும்பாலும் காணமுடியாது எனவும் றஸாட் கூறினார்.

“ஐஸ் போதைப் பொருள் ஒரு தூண்டியாகச் செயற்படும். உதாரணமாக ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு போன்றவை அதனால் அதிகரிக்கும். உள்ளெடுத்தால் தூக்கம் வராது”.

றஸாட்

“இதனைப் பாவிப்பவர்கள் உடல் எடையினை திடீரென இழந்து விடுவர். குறுகிய காலத்துக்குள் மனநோய்க்கு ஆளாகுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. பாவிப்பவர் தனது உயிரை அவரே மாய்த்துக் கொள்ளும் நிலைக்குச் சென்று விடுவார்” எனவும் றஸாட் விவரித்தார்.

இந்த போதைப்பொருளைப் பாவிப்பவருக்கு பாலியல் தேவை ஏற்படாது எனவும் அவர் கூறுகின்றார். ஐஸ் பாவிக்கும் போது ஒருவரில் ‘டோபமைன்’ (Dopamine) மிக அதிகளவில் உருவாகும் என்றும், அது அவருக்குள் ‘நிஜமற்ற அதீத மகிழ்ச்சி’யை ஏற்படுத்தும் எனவும் றஸாட் குறிப்பிடுகின்றார். “ஒரு மனிதன் சந்தோசமாக இருக்கும் போது அவனுள் டோபமைன் அதிகம் உருவாகும்.

ஒருவர் பாலியல் உறவில் இருக்கும் போது 200 மைக்ரோகிராம் டோபமைன் அவருள் இருக்கும். ஒருவருக்கு விருப்பமானவர் அவரின் அணைப்பில் இருக்கும் போது, அவருக்குள் 250 மைக்ரோகிராம் டோபமைன் உருவாகும். ஆனால் ‘ஐஸ்’ போதைப் பொருளை உள்ளெடுக்கும் ஒருவருக்குள் 1100 மைக்ரோகிராம் அளவில் டோபமைன் உருவாகும். இதனால் ‘ஐஸ்’ போதைப் பொருள் பாவிக்கின்றவர்களுக்கு, அதை விடவும் வேறு மகிழ்ச்சி தேவைப்படாது” எனவும் றஸாட் விளக்கமளித்தார்.

5 கிராம் வைத்திருந்தால் மரண தண்டனை

இது இவ்வாறிருக்க, ‘ஐஸ்’ போதைப் பொருளை 05 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் வைத்திருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள்கால சிறைத் தண்டனை விதிக்கும் ஏற்பாடுகள் புதிய திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கலால் திணைக்களத்தின் (Excise Department) ஊவா மாகாணத்துக்குப் பொறுப்பான உதவி ஆணையாளர் என் சுசாதரன் தெரிவித்தார்.

செயற்கை (synthetic) போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை தண்டிப்பதற்கு இலங்கையில் இதுவரையில் போதுமானதும், இறுக்கமானதுமான சட்டங்கள் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார். “உதாரணமாக ஐஸ் போதைப் பொருள் தொடர்பான குற்றமொன்றுக்கு எந்த நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வது? அதற்கு பிணை வழங்க முடியுமா இல்லையா? வழங்க முடியுமாயின் எந்த நீதிமன்றம் வழங்கலாம் போன்ற விடயங்களில் தெளிவின்மை இருந்தது”.

உதவி ஆணையாளர் சுசாதரன்

ஆனால் தற்போதைய திருத்தச் சட்டத்தில்தான் தெளிவாக அவை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவும் அவர் கூறினார்.

இந்தத் சட்டத் திருத்தத்துக்கு முன்னர், ஐஸ் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மிகக் குறைந்தளவு அபராதங்களும், சிறைத் தண்டனைகளுமே வழங்கப்பட்டதாகவும் உதவி ஆணையாளர் சுசாதரன் தெரிவித்தார்.

புதிய சட்டத் திருததத்தின்படி, மூன்று கிராமிலிருந்து 5 கிராமுக்கு குறைவான ஐஸ் போதைப்பொருள் குற்றத்தைப் புரியும் ஒருவருக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு குறையாததும் 5 லட்சம் ரூபாயை விஞ்சாததுமான அபராதம் மற்றும் 10 ஆண்டுகளுக்கு குறையாததும் 20 ஆண்டுகளை விஞ்சாததுமான சிறை மறியற் தண்டனை ஆகியவற்றில் ஏதேனுமொன்று அல்லது அபராதம் மற்றும் மறியற் தண்டனை இரண்டும் விதிக்கப்பட முடியும்.

2 கிராமில் இருந்து 3 கிராமுக்கு குறைவான ஐஸ் போதைப் பொருள் குற்றத்துக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு குறையாததும் 2 லட்சம் ரூபாயை விஞ்சாததுமான அபராதம் மற்றும் 7 ஆண்டுகளுக்கு குறையாததும் 10 ஆண்டுகளை விஞ்சாததுமான சிறை மறியற் தண்டனை ஆகியவற்றில் ஏதேனுமொன்று அல்லது அபராதம் மற்றும் மறியல் ஆகிய இரண்டு தண்டனைகளும் வழங்கப்படலாம் என்று, புதிய சட்டம் கூறுகிறது.

இரண்டு கிராமுக்கு குறைவான ஐஸ் போதைப் பொருளுடன் தொடர்பான குற்றத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு குறையாததும் 50 ஆயிரம் ரூபாயை விஞ்சாததுமான அபராதம் மற்றும் 3 ஆண்டுகளுக்கு குறையாததும் 5 ஆண்டுகளை விஞ்சாததுமான மறியற் தண்டனை ஆகியவற்றில் ஏதேனுமொன்று அல்லது அபராதம் மற்றும் மறியற் தண்டனை ஆகிய இரண்டும் விதிக்கப்படலாம்.

ஐஸ் போதைப் பொருளை வியாபாரம் செய்தல், உடமையில் வைத்திருத்தல், இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்தல் ஆகியவை அனைத்தும் மேற்படி தண்டனைகளுக்குரிய குற்றங்களாகக் கருதப்படும். மோர்பீன், கொக்கேன், ஹெரோயின் ஆகிய போதைப்பொருள்கள் தொடர்பான குற்றச் செயல்களுக்கும் இதே சட்டம் சட்டம் செல்லுபடியாகும்.

மனநோய் பாதிப்பு நிச்சயம் ஏற்படும்

‘ஐஸ்’ போதைப் பாவனைக்கு அதிகளவில் இளைஞர்களே பலியாவதாகக் கூறுகிறார் உளநோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் ஏ.ஜீ. மொஹமட் ஜுரைஜ். இந்தப் போதைப்பொருள் பாவையினால் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்றும், அந்த நிலைமை சிந்தனையிலும் நடத்தையிலும் மோசமான மாற்றங்களை உருவாக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

“ஐஸ் போதைப்பாவனையினால் Amphetamine psychosis எனும் மனநோய் உருவாகும். அதனால் தூக்கமின்மை ஏற்படும், எதிலும் அவதானிப்பு இருக்காது, பசிக்காது, அதிகளவில் கோபம் வரும், ஆத்திரம் ஏற்படும், மற்றவர்களைச் சந்தேகப்படுவார், மாயைகள் தோன்றும், இல்லாத விடயங்கள் தோன்றுவது போலவும், கேட்பது போலவும் உணர்வார், தனக்கு எதிராக மற்றவர்கள் ஏதோ செய்வதாக நினைப்பார்கள்” என பாதிப்பின் தன்மை குறித்து அவர் விளக்கிக் கூறினார்.

டொக்டர் ஜுரைஜ்

“ஐஸ் பாவனையினால் ஏற்படும் மனநோய் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பெரிதாக இருக்கவில்லை. வெளிநாடுகளில் படிக்கும் போதுதான் அறிந்திருந்தோம். ஆனால் இப்போது இலங்கையில் ஐஸ் பாவனையினால் ஏற்படும் மனநோய் பாதிப்புடன் நபர்கள் சிகிச்சைக்காக வருகின்றமை சாதாரணமான விடயமாகியுள்ளது” எனவும் டொக்டர் ஜுரைஜ் குறிப்பிட்டார்.

ஐஸ் போதைப் பொருளால் மனநோய் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை வைத்தியசாலையில் தங்க வைத்துச் சிகிச்சையளிப்பதுதான் சிறந்தது எனவும் அவர் கூறுகின்றார். “ஒவ்வொருவரையும் பொறுத்து அவர்கள் பாதிப்புக்குள்ளாகும் காலம் மாறுபடும். சிலர் ஐஸ் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கி ஓரிரு வாரங்களிலேயே மனநோய் பாதிப்புக்குள்ளாகி விடுகின்றமையினை கண்டுள்ளோம்” என்று கூறும் அவர், ஐஸ் போதைப் பொருள் பாவிக்கும் அனைவரும் மனநோயினால் பாதிக்கப்படுவர் என்கிறார்.

இதற்காக சிகிச்சையெடுத்துக் கொள்வோர் ‘ஐஸ்’ போதைப் பாவனையிலிருந்து முழுமையாக விடுபடுவதோடு, வழங்கப்படும் மருந்துகளை முறையாகப் பாவிக்கவும் வேண்டும் என அறிவுறுத்துகிறார். “அவ்வாறு நடந்து கொண்டால் இரண்டு மூன்று வாரங்களில் நோயிலிருந்து விடுபட முடியும்” எனக் குறிப்பிடும் டாக்டர் ஜுரைஜ், சிலருக்கு நோயிலிருந்து விடுபட அதிக காலம் எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்