அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரை பதவி கவிழ்க்குமாறு ஹக்கீம் உத்தரவு: வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் சூழ்ச்சி ஓட்டமாவடி சந்திப்பில் ஒப்படைப்பு

🕔 November 30, 2022

– மரைக்கார் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடித்து, அந்த சபையின் தவிசாளரை பதவியில் இருந்து அகற்றுமாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவந்துள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.எல். அமானுல்லா பதவி வகிக்கின்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடியில் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரமுகர்களைச் சந்தித்த ஹக்கீம், இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், மு.காங்கிரஸ் உயர்பீட அங்கத்தவருமான உவைஸிடம் இதற்கான பொறுப்பினை மு.கா. தலைவர் வழங்கியுள்ளார் என அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லா தொடர்பில் மு.கா. தலைவருக்கு தொடர்ச்சியாக கிடைந்து வந்த முறைப்பாடுகள் மற்றும் கட்சி தொடர்பில் அவரின் அலட்சியமான நடத்தைகளை கருத்திற்கொண்டே, அவரை தவிசாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஹக்கீம் தீர்மானித்துள்ளதாகத் கூறப்படுகிறது.

பதவி வழியாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா- மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினராக உள்ளபோதும், அவர் எந்தவொரு உயர் பீட கூட்டத்திலும் பங்குபற்றியதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கட்சியின் கடந்த பேராளர் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கு இல்லாமல் போனாலும் பரவாயில்லை, வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடித்து தவிசாளரைப் பதவி நீக்குமாறு ஹக்கீம் உத்தரவிட்டுள்ளதாக அந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் கூறினார்.

தவிசாளர் அமானுல்லா தொடர்பில் மு.கா. தலைவர் அந்தளவு கோபத்துடன் இருப்பதாகவும் ‘புதிது’ செய்தித்தளத்திடம் பேசியவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும் அமானுல்லாவை தவிசாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தற்போது பிரதித் தவிசாளராகப் பதவி வகிக்கும் பாலமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.எம். ஹனீபாவை தவிசாளர் பதவிக்குத் தெரிவு செய்வதற்கும், இந்த சந்திப்பின் போது தனது விருப்பத்தை ஹக்கீம் வெளியிட்டுள்ளார்.

இதன்பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை பிரதேச அமைப்பாளர் அலியாரிடம் பேசிய மு.கா. தலைவர் ஹக்கீம்; “ஹனீபாவை தவிசாளராகத் தெரிவு செய்வதை எதிர்க்கக் கூடாது” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லா ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் தீவிர ஆதரவாளராவார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் – மு.கா. தலைவருடன் முரண்பட்டுள்ள நிலையில், கட்சியில் ஹரீஸ் வகித்து வந்த பிரதித் தலைவர் பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்