300 வைத்தியர்கள் இவ்வருடம் நாட்டை விட்டு வெளியேற்றம்; அனுமதி பெற்று செல்லாதோர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர்: சுகாதார அமைச்சர்

🕔 November 29, 2022

நாட்டை விட்டு, இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் சுமார் 300 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (29) தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வெளிநாடு செல்வதற்கு சுகாதார அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாத வைத்தியர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என ஏற்கனவே கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு அமைச்சு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“வைத்தியர்கள் வெளிநாட்டில் பணியாற்றுவதற்கு ஐந்து வருடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் இதன் போது கூறினார்.

“வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்களுக்கு விடுப்பு அனுமதி உள்ளதா என்பதைச் சரிபார்க்குமாறு விமான நிலையத்தில் உள்ள குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளுக்கும் நாங்கள் கூறியுள்ளோம். அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதுடன், அவர்களுக்கு இலங்கை மருத்துவ சபையினால் வழங்கப்பட்ட உரிமமும்ரத்து செய்யப்படும். அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டால் அவர்கள் வெளிநாடுகளில் கூட தொழில் செய்ய முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருப்பு பட்டியலில் உள்ள வைத்தியர்களின் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்