இருவருக்கு மன்னிப்பு, ஒருவருக்கு தண்டனை: ஹக்கீம் ‘கத்தி’க்கு பலியான ஹரீஸ்

🕔 November 7, 2022

– மரைக்கார் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், அந்தக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். தவம் மற்றும் ஆரிப் சம்சுதீன் ஆகியோர், தற்போது புத்தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம், நேற்று நடைபெற்ற கட்சியின் உயர் பீடக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதும், பேராளர் மாநாட்டில் இன்று கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மு.காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, மிகக் கடுமையாக எழுதியும் பேசியும் வந்த தவம், அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாதிட்டு வந்தார்.

இந்த நிலையில் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் தௌபீக் ஆகியோருக்கு மீண்டும் கட்சியில் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென, தலைவர் ரஊப் ஹக்கீம் – தான்தோன்றித்தனமாக முடிவு செய்து, உயர் பீடத்துக்கு வழங்கிய அழுத்தம் காரணமாக, இன்றைய பேராளர் மாநாட்டில், அவர்களுக்கு பொருளாளர் மற்றும் அமைப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கட்சியில் இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவிகள் வழங்குவதற்கு ஹக்கீம் நேற்றைய உயர் பீடக் கூட்டத்தில் எடுத்த முடிவை ஆட்சேபித்து, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் கருத்துக்களை முன்வைத்திருந்ததாகவும் அறிய முடிகிறது.

இந்தப் பின்னணியிலேயே அந்தக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் – இன்றைய பேராளர் மாநாட்டைப் புறக்கணித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஹரீஸுக்கு ‘வெட்டு’

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு – மீண்டும் கட்சியில் முக்கிய பதவிகளை ஹக்கீம் வழங்கியுள்ள போதிலும், இடைநிறுத்தப்பட்ட மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம். ஹரீஸுக்கு எந்தப் பதவிகளும் கட்சியில் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்றைய பேராளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஹரீஸ் மற்றும் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் ஆகியோர் கட்சியில் வகித்து வந்த ‘பிரதித் தலைவர்’ பதவிகள் – வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸுடன், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு நீண்ட காலமாக அதிருப்தி இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும் அந்த அதிருப்தி – பல இடங்களில் வெளிப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரை ஹரீஸை மு.கா. தலைவர் ஹக்கீம் தற்போது வெளிப்படையாகவே ‘வெட்டி’யுள்ளார்.

இதனையடுத்து ஹரீஸின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் ஹக்கீமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்