கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு, மு.கா தலைவரின் தான்தோன்றித்தன முடிவின் பிரகாரம் பதவிகள்: பேராளர் மாநாட்டில் அறிவிப்பு

🕔 November 7, 2022
இடமிருந்து வலமாக தௌபீக் (மூன்றாவது), பைசல் காசிம் (நாலாவது)

முஸ்லிம் காங்கிரஸிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோருக்கு அந்தக் கட்சியில் மீண்டும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மு.காங்கிரஸின் பேராளர் மாநாடு தற்போது புத்தளத்தில் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் – கட்சியின் பொருளாளராகவும், எம்.எஸ். தௌபீக் – தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியை விட்டு இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு பதவிகள் வழங்கக் கூடாது என, நேற்று (06) நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மு.கா. தலைவர் ஹக்கீமுடைய அழுத்தத்தின் காரணமாக, மேற்படி இருவருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய அரசாங்கத்தின் சட்டமூலங்கள் மற்றும் வரவு – செலவுத் திட்டத்துக்கு மு.காங்கிரஸின் தலைவர் தவிர்ந்த ஏனைய 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கி வந்தனர்.

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகவும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரையும் கட்சியிலிருந்து இடைநிறுத்துவதாகவும் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதியன்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே இடைநிறுத்தப்பட்டிருந்தவர்களுக்கு எதிராக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் மற்றும் தௌபீக் ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மு.கா. தலைவரின் தான்தோன்றித்தன முடிவின் பிரகாரம், உயர் பீடத்துக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே இந்தப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக, உயர் பீட உறுப்பினர்களில் சிலர் கூறுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக மீண்டும் ஹக்கீம் தெரிவாகியுள்ள நிலையில், இன்றைய பேராளர் மாநாட்டில் முக்கிய பதவிகள் அறிவிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வருமாறு;

  • முழக்கம் மஜீத் – முழக்கம் மஜீத்
  • செயலாளர் – சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்
  • நாடாளுமன்ற உறுப்பினர் பைஷல் காசிம் – தேசிய பொருளாளர்
  • நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் – தேசிய அமைப்பாளர். கட்சியின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் – பிரதித் தலைவர்.
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் – பிரதித் தலைவர்.
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மெளலானா – பிரதித் தலைவர்.
  • கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை – பிரதி தேசிய அமைப்பாளர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்