பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேர், 02 பிக்குகள், பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட 342 பேருக்கு இவ்வருடம் எச்ஐவி தொற்று

🕔 October 26, 2022

ல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 50 பேர், இந்த ஆண்டின் – முதல் ஒன்பது மாதங்களில் எச்ஐவி (HIV) யால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இரண்டு பௌத்த பிக்குகள் உட்பட 342 எச்ஐவி தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 1987 ஆம் ஆண்டு முதல் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை பதிவாகியுள்ள தொற்றுக்குள்ளானவர்களில் பிக்குகள் மற்றும் பிற மத குருமார்கள் உட்பட சுமார் 20 மதகுருமார்கள் இருப்பதாக டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு முதல் 4,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2300 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், மதிப்பீடுகளின்படி, தொற்றுக்குள்ளான சுமார் 3,700 பேர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எச்ஐவி யினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1,500 பேருக்கு, தாங்கள் பாதிப்புக்குளாகி இருப்பது தெரியாது என்றும், அவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட பலர் வைரஸால் பாதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

குழந்தைகளுடன் பாலியல் தொடர்பான விடயங்களை வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் இவ்வாறான தொற்றுக்களை தடுக்க முடியும் என டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

பெற்றோர்களும், பாதுகாவலர்களும் இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்பான கட்டுரை: புன்னகைகள் ஆட்கொல்வதில்லை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்