பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், சிறைத் தண்டனை அனுபவித்த தமிழ் கைதிகளுக்கு விடுதலை

🕔 October 23, 2022

யங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் இந்த வாரம் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் நான்கு கைதிகள், கடந்த  வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். மேலும் மூன்று பேர் நாளை சிறையிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டாவது கைதி விடுவிக்கப்படுவதற்கு முன்னர் – புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட  வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட பின்னர் இவர்கள் பல்வேறு சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக கடுமையான சிறைவாசங்களை அனுபவித்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச  தெரிவித்திருக்கிறார்.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த நல்லெண்ணச் சைகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட பெரும்பாலான கைதிகள் நீண்ட கால சிறைவாசத்திற்குப் பிறகு, தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் கொண்டாட்டங்களுக்காக ஒன்றிணைவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று கைதிகளின் விடுதலையில்  சிறிது காலதாமதம் ஏற்பட்டது. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே தங்களின் தண்டனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தனர்.

அந்த மேல்முறையீடுகள் திரும்பப் பெறப்பட்டவுடன், அவர்கள்  நாளைக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவர்களின் விடுதலைக்கான ஆவணங்களில் கடந்த  புதன்கிழமை கையொப்பமிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்