உள்ளூராட்சி உறுப்பினர்கள் தொகையை பாதியாகக் குறைக்கும் ஜனாதிபதியின் அறிவிப்பு: என்ன வகை தந்திரம்?

🕔 October 17, 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

லங்கையிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் மொத்தமாக 8,690 உறுப்பினர்கள் உள்ளனர்.

2018ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் மூலமாகவே, இவ்வாறு அதிக தொகையிலான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதற்கு முந்தைய தேர்தல் 2011ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது மொத்தம் 4,486 உறுப்பினர்கள் தேர்வாகினர்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் இருந்த காலத்திலேயே, தற்போது நடைமுறையிலிக்கும் உள்ளுராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாகவே, உள்ளுராட்சி சபைகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை – இப்போது உள்ளவாறு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக அதிகரிக்கப்பட்டது.

அந்த வகையில் ரணில் விக்ரமசிங்கவின் முன்னைய ஆட்சிக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தொகையை, அவரின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் குறைக்க வேண்டுமெனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போதுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தொகையைக் குறைப்பதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர்தான், அடுத்த உள்ளூராட்சித் தேர்தலை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் 4 ஆண்டுகளாகும். அந்த வகையில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதன்படி 2022 பிப்ரவரியுடன் குறித்த சபைகளின் பதவிக் காலம் நிறைவடைந்தன. ஆயினும், 2023 மார்ச் 19ஆம் தேதி வரை, நாட்டிலுள்ள சகல உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவதாக கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அறிவிப்பு வெளியானது.

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தொகையை அரைவாசியாகக் குறைப்பதற்கு நடவடிகை எடுக்கவுள்ளதாக, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதை அடுத்து, அது தொடர்பில் கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஆராய்வதற்கு முன்னர், வாசகர்கள் இந்தக் கட்டுரையை இலகுவாக விளங்கிக் கொள்ளும் பொருட்டு, தற்போதுள்ள உள்ளூராட்சி தேர்தல் சட்டம் குறித்தும், இதற்கு முன்னர் இந்தச் சட்டம் எப்படி அமைந்திருந்தது என்பது பற்றியும் இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

உள்ளூராட்சி சபைகளும் சட்டங்களும்

இலங்கை உள்ளூராட்சி சபைகளாக தற்போது மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவை காணப்படுகின்றன. 1987ஆம் ஆண்டு ‘பிரதேச சபை’ முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் 1980 இல் ‘மாவட்ட அபிவிருத்தி சபை’ உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த முறைமை வெற்றியளிக்கவில்லை.

பிரதேச சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், வட்டார அடிப்படையிலேயே உள்ளுராட்சி சபைகளுக்கு உறுப்பினர்கள் தெரிவாகினர். ஒரு வட்டாரத்துக்கு ஒருவர் எனும் வகையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் – தமது சபைக்கான தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைத் தெரிவு செய்தனர்.

இந்த வட்டார முறைமை 1987ம் ஆண்டு பிரதேச சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு இல்லாமல் போனது. அதற்குப் பதிலாக விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை அறிமுகமானது. இதன்படி ஒரு கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவுக்கு கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில், உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதிக வாக்குகளைப் பெறுவதன் மூலம் அதிக உறுப்பினர்களைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவிலிருந்து – சபையின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தெரிவு செய்யப்பட்டனர்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ், ஒரு கட்சிக்கு அல்லது சுயேச்சை குழுவொன்றுக்கு வாக்களிக்க முடியும். அத்தோடு, எந்தச் சின்னத்துக்கு ஒருவர் வாக்களிக்கிறாரோ, அந்தச் சின்னம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மூவருக்கு அதே வாக்குச் சீட்டில் ‘விருப்பு வாக்கு’களையும் வழங்க முடியும். அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவோர் உறுப்பினார்களாக தெரிவாவர்.

இந்த விருப்பு வாக்கு அடிப்படையிலான விகிதாசாரத் தேர்தல் முறைமை, 2012, 2016ம் ஆண்டுகளில் திருத்தப்பட்டு, இறுதியில் 2017ம் ஆண்டு ‘கலப்புத் தேர்தல் முறைமை’ கொண்ட – புதிய உள்ளுராட்சித் தேர்தல் சட்டம் உருவாக்கப்பட்டது. அதுவே தற்போது அமலிலுள்ள 2017ம் ஆண்டின் 16ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள் (திருத்தப்பட்ட) சட்டமாகும்.

இதன்படி உள்ளூராட்சி சபை உறுப்பினர் தெரிவில் 60 வீதமானோர் வட்டார மட்டத்திலும், 40 வீதமானோர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுகின்றனர். இந்த சட்டத் திருத்தத்தின் மூலமாக, மொத்த உள்ளுராட்சி சபை உறுப்பினர் தொகையில் 25 சத வீதத்துக்குக்கு குறையாதோர் பெண்களாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

தேர்தலை தள்ளிப்போடும் தந்திரம் – பேராசிரியர் பௌசர்

சரி, இப்போது விடயத்துக்கு வருவோம்.

‘உள்ளூராட்சி சபைகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைத்த பின்னர்தான் – அடுத்த தேர்தலை நடத்துவது’ என ஜனாதிபதி கூறியிருப்பதை, தேர்தலைப் தள்ளிப்போடுவதற்கான ஒரு யுக்தியாகவே பார்க்க வேண்டியுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர் கூறுகிறார்.

ஆயினும், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பது வரவேற்புக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.

“கலப்பு முறையில் தேர்தல் நடத்தப்பட்டதன் காரணமாகவே உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமானது” என்றும், “வட்டார ரீதியிலும் விகிதாசார அடிப்படையிலும் உறுப்பினர்களை தெரிவு செய்தமையினால் ஏற்பட்ட அதிகரிப்பே இதுவாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள கலப்பு தேர்தல் முறைமை – எதிர்பார்த்த அளவில் வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவித்த பேராசிரியர் பௌசர் இந்த கலப்பு முறையின் காரணமாக உள்ளூராட்சி சபைகளில் உறுதியான ஆட்சியை ஏற்படுத்த முடியவில்லை என்றும், சபைகளில் பெரும்பான்மையை உறுதி செய்வதில் அதிகமான இடங்களில் நெருக்கடி ஏற்பட்டது எனவும் கூறினார்.

“திடீரென உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இம்முறை அதிகரித்தமையினால், பெரும் செலவுகளை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது. உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவு தொகை அதிகமாகியுள்ளது”.

“உள்ளூராட்சி சபைகளுக்கு போதிய வருமானமில்லை. பெரும்பாலும் மாகாண சபை மற்றும் மத்திய அரசின் நிதியியே உள்ளூராட்சி சபைகள் தங்கியுள்ளன. அவற்றின் உள்ளூர் வரி வருமானங்களும் குறைவாகும்”.

“இதனடிப்படையில் பார்க்கும்போது, தற்போதைய பொருளாதார நெருக்கடி கால கட்டத்தில், உள்ளூராட்சி உறுப்பினர் தொகையைக் குறைப்பது நல்லதுதான்” என்றார்.

பேராசியரியர் பௌசர்

நாட்டின் செலவுகளைக் குறைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. பொதுத்துறைகளில் செலவுகளைக் குறைப்பதோடு, அரசியல் நிறுவனங்களில் ஏற்படும் மேலதிக செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

தற்போதுள்ள கலப்புத் தேர்தல் முறைமையை தொடர்ச்சியாகக் கொண்டு சென்றாலும்கூட, சபைகளின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பது நல்லது என பேராசிரியர் பௌசர் குறிப்பிட்டார்.

உறுப்பினர் எண்ணிக்கை குறையும்போது, உறுதியான ஆட்சியை ஏற்படுத்துவது சுலபமாக அமையும் எனவும் அவர் கூறினார்.

“ஆனாலும், உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைத்த பின்னரே, அடுத்த தேர்தல் நடத்தப்படும் என – ஜனாதிபதி கூறியுள்ளமை, தேர்தலை ஒத்தி வைக்கும் தந்திரமாகும்” என்றார் அவர்.

“நிதியை மிச்சப்படுத்தவேண்டுமானால், சபைகளை கலைத்து விட்டிருக்கலாம்”

“தற்போதைய பொருளாதார நெருக்கடியில், நிதியை மீதப்படுத்த வேண்டுமென அரசாங்கம் உண்மையாகவே விரும்புமாயின், அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் கலைத்து விட்டிருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக அவற்றின் பதவிக் காலம் ஓர் ஆண்டுக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது” எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டால் ஆளும் தரப்பினருக்கு அது பாதகமாக அமையும் என்கிறார் பேராசிரியர் பௌசர்.

” உள்ளூராட்சி சபைகள் இப்போது கலைக்கப்பட்டால், அந்த நிலைமை அரசாங்கத்துக்கு மேலும் எதிர்ப்பை ஏற்படுத்தும். சபைகள் கலைக்கப்பட்டால் ஆளும் தரப்பு உறுப்பினர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானோர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, மக்கள் பக்கமும் – ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கமும் செல்லத் தொடங்குவார்கள். ஆளும் தரப்பினருக்கு இப்போது மக்கள் ஆதரவு இல்லை என்பதால், அவர்கள் மறுதரப்புக்கு மாறத் தொடங்குவார்கள்”.

“இவை நடந்து விடாமல், தமது உள்ளூராட்சி உறுப்பினர்களை – தமது கைகளுக்குள் வைத்திருக்க வேண்டுமென்றால், சபைகளைக் கலைக்காமல் இருப்பதே, இப்போது அரசாங்கத்துக்குள்ள ஒரே வழியாகும்” எனவும் அவர் கூறினார்.

“உள்ளூராட்சி சபைகளைக் கலைத்து விடுவது – பொருளாதார ரீதியில் நாட்டுக்கு பயனுடையதாக அமையும் என்றாலும், கலைக்காமல் இருப்பதுதான் ஆளும் தரப்பினருக்கு அரசியல் ரீதியில் நன்மையாக அமையும்” எனவும் பேராசிரியர் பௌசர் தெரிவித்தார்.

உறுப்பினர் தொகையை குறைப்பதோடு, மேலும் திருத்தங்கள் தேவை

இவ்விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சிலுடன் பிபிசி தமிழ் பேசிய போது; “உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தொகையை குறைப்பது நல்லது” என, அவர் கூறியதோடு, தற்போதுள்ள கலப்புத் தேர்தல் முறையில் உள்ள பல விடயங்கள் திருத்தப்படவும் வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

“உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தொகை அதிகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல சபைகளில் அங்குள்ள உறுப்பினர்கள் செய்வதற்கான வேலைகள் எவையும் இல்லை” எனவும் அவர் கூறினார்.

“வட்டார முறைமை நல்லதுதான். ஒவ்வொரு உறுப்பினருக்குமான நிர்வாக எல்லையை குறித்தொதுக்கும்போது, அவர்களின் வேலைகளை சிறப்பாக ஒழுங்குபடுத்த முடியும். ஆனால், ஒரு வட்டாரத்தில் மக்களால் ஒருவர் தெரிவு செய்யப்படுகின்ற அதேவேளை, அதே வட்டாரத்துக்கு விகிதாரசார அடிப்படையில் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படாதவரும் நியமிக்கப்படுகின்றார். இதனாலேயே உறுப்பினர்கள் தொகை அதிகரிக்கிறது” என்றார்.

கலப்பு தேர்தல் முறைமையை தொடர்ந்தும் பின்பற்றுவதாக இருந்தால், வட்டாரங்களின் எண்ணிக்கையை குறைப்பதன் ஊடாக, உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைக்க முடியும் என, சட்டத்தரணி அன்சில் யோசனையொன்றை முன்வைத்தார்.

ஆனாலும், பழைய விகிதாசார முறைமையே நல்லது என, அவர் தெரிவித்தார். “விகிதாசார முறைமயில் அதிக வாக்குகளைப் பெற்ற தரப்புக்கே சபையின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி வழங்கப்படும். அந்த முறைமையின் கீழ், கூட்டிணைந்து ஆட்சியமைக்க முடியாது. ஆனால், தற்போதைய கலப்பு முறைமையின் கீழ், குறைந்த வாக்குகளைப் பெற்ற அல்லது தோல்வியடைந்த தரப்பு ஆட்சியமைக்கும் நிலைவரம் உருவாகியுள்ளது” என்றார்.

உள்ளூராட்சி சபைகளின் ஒவ்வொரு வரவு – செலவுத் திட்டத்தின் போதும், உறுப்பினர்களின் பணயக் கைதிகள் போல், சபை தலைவர்கள் மாறி விடுகின்றனர் என, அன்சில் இதன்போது குற்றஞ்சாட்டினார்.

சட்டத்தரணி எம்.ஏ. அன்சில்

“வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்தால், சபையின் தலைவராக இருப்பவரிடமிருந்து – தலைவர் பதவி பறிபோய்விடும். அதனைத் தடுப்பதற்காக ஒவ்வொரு உறுப்பினரின் வாக்குகளையும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகப் பெறும் பொருட்டு, சபையின் உறுப்பினர்களை தலைவர்கள் விலைகொடுத்து வாங்குகின்றனர் அல்லது அவர்களிடம் மண்டியிடுகின்றனர்” என்றார்.

தற்போதுள்ள கலப்பு முறைமையின் கீழ், உறுதியான ஆட்சியொன்றினை உள்ளூராட்சி சபைகளில் அமைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

“பெண்கள் தொகை அதிகரிப்பு – எதனையும் சாதிக்கவில்லை”

“இம்முறை உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் தொகை 25 வீதத்துக்கு குறையாமல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த 5 ஆண்டு உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தில் – பெண்களின் பங்களிப்பு என்ன என்று கேட்டால், எவையும் இல்லை. விதிவிலக்காக சிறப்பாக செயற்படும் சில பெண் உறுப்பினர்களும் உள்ளனர்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உறுப்பினர்கள் தொகை அதிகமாகும் போது, சபையில் தீர்மானங்களை எடுப்பதில் சிக்கல் நிலை உருவாகிறது என்றும், பெருந்தொகையாக உள்ள உறுப்பினர்களில் பலருக்கு வினைத்திறன் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, உள்ளூராட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவதோடு, மேற்சொன்னவை உள்ளிட்ட குறைகளும் தற்போதுள்ள தேர்தல் சட்டத்தில் களையப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணி அன்சில் வலியுறுத்தினார்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்