பொருளாதார நெருக்கடியால், பாடசாலைகளை விட்டும் மாணவர்கள் வெளியேறும் நிலை அதிகரித்துள்ளது: ஆய்வில் தகவல்

🕔 October 15, 2022

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறும் நிலை அதிகரித்துள்ளது.

குறிப்பாக பெருந்தோட்டத் துறையில் உள்ள குடும்பங்களின் மாணவர்கள், கல்வியை பாதியிலேயே நிறுத்திவிடுவதாக அண்மையில் செஞ்சிலுவைச் சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பன 11 மாவட்டங்களில் 2,871 குடும்பங்கள் மற்றும் 300 தோட்டத்துறை குடும்பங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 சதவீதத்தினர் தங்கள் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறும் அபாயம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் நிலவும் சமூக பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களை கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நேர்காணல் செய்யப்பட்ட 2,871 குடும்பங்களில், 34 சதவீத குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியால் தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 60 சதவீதம் பேர், தமது பிள்ளைகள் தொடர்பில் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

2020ஆம் ஆண்டில், பாடசாலைகள் மூடப்பட்டமையால், ஆசிரியர்களால் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

கிராமப்புறங்களில் தொழில்நுட்ப இடைவெளி காரணமாக சூம் வகுப்புகள் விரும்பிய முடிவுகளை அடையத் தவறிவிட்டன.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரு சாராரும் – தினசரி பாடசாலைகளுக்கு செல்ல முடியாமல் பல சந்தர்ப்பங்களில் பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இலங்கை சட்டத்தின் கீழ், 16 வயதுக்குட்பட்ட அனைத்து பிள்ளைகளும் கல்வி பெறுவது கட்டாயமாகும்.

இதேவேளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 10 பெருந்தோட்டங்களில் உள்ள 300 குடும்பங்களில் 7 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்