நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றில் சரண்: பின்னர் நடந்தது என்ன?

🕔 October 13, 2022

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அவர் நீதிமன்றில் இன்று (13) சரணடைந்தார்.

ராஜாங்க அமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை ரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி மனுவொன்றை தாக்கல் செய்தார்.

நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் – நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ராஜாங்க அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

ராஜாங்க அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, தனது கட்சிக்காரர் இந்த மனு தொடர்பில் அழைப்பாணை எதனையும் பெறவில்லை என நீதிமன்றில் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அழைப்பாணை பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

மீளப்பெறப்பட்ட பிடியாணை

நீதித்துறையை குறிவைத்து அண்மையில் சனத் நிஷாந்த வெளியிட்ட அவமதிப்புக் கருத்து தொடர்பில், அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர்கொள்ளவுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக ஏன் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்கான காரணத்தைக் கூறுவதறகாக – நேரில் ஆஜராகுமாறு ராஜாங்க அமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக அழைப்பாணை அனுப்பியிருந்தது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை தண்டிக்க உத்தரவிடுமாறு கோரி, நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான இலங்கை நீதிச் சேவை சங்கம் மற்றும் இரண்டு சட்டத்தரணிகள் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இதேவேளை, சனத் நிஷாந்த மூன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் ராஜாங்க அமைச்சரை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.

எதிர்கால விசாரணைக்கு அவர் சரியான நேரத்தில் ஆஜராகத் தவறினால், பிணை நிபந்தனைகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று நீதிமன்றம் இதன்போது தெரிவித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்