அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரில் ஜனாதிபதி சந்தித்தார்: மரிக்காரின் குற்றச்சாட்டுக்கு ரணில் மறுப்பு

🕔 October 4, 2022

த்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாளர் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்த குற்றச்சாட்டை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) நிராகரித்தார்.

“ஜப்பானில் இருந்து ஜனாதிபதி இலங்கை திரும்பும் வழியில் சிங்கப்பூர் அமைச்சர் ஒருவரைச் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர் உண்மையில் அர்ஜுன மகேந்திரனைச் சந்தித்து அவருடன் மதிய உணவு உட்கொண்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது” என மரிக்கார் இதன்போது கூறினார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி; “அர்ஜுன மகேந்திரனுடன் நான் சாப்பிடவில்லை. சிங்கப்பூர் அமைச்சருடன் காலை உணவை மட்டும் சாப்பிட்டேன். நான் சிங்கப்பூரில் இருந்து கொழும்பு வந்தபோது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மதிய உணவு சாப்பிட்டேன். நாடாளுமன்ற உறுப்பினருக்கு மெனுவை காட்ட முடியும்” என்றார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசிய மரிக்கார்; “மற்றுமொரு போராட்டம் உருவாக உள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் இதணைக் கூறியுள்ளார்” என்றார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி; “`ஹிருணிகாவின் அடிச்சுவடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் பின்பற்றுகிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக” உள்ளது எனக் கூறினார்.

இதன்போது “ஹிருணிகா பிரேமச்சந்திரவை நான் ஒருபோதும் பின்பற்றமாட்டேன் என ஜனாதிபதிக்கு உறுதியளிக்க விரும்புகின்றேன்” என மரிக்கார் தெரிவித்தார்.

“நீங்கள் ஹிருணிகாவைப் பின்பற்றவில்லை என்றால், என்னைப் பின்தொடர்ந்து எனக்காக வேலை செய்யுங்கள்” என்று ஜனாதிபதி பதிலளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்