ரஞ்சனுக்கு மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி வெளியிட்ட ஆவணம்: நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நீதியமைச்சர் இணக்கம்

🕔 August 29, 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட ஆவணம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இணங்கியுள்ளார்.

குறித்த ஆவணத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.

ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை நாடாளுமன்றம் அறிந்து கொள்ள வேண்டும் என லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, இந்த ஆவணத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த வாரம் சிறையிலிருந்து விடுதலையானார்.

அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியுள்ளார்.

எதிர்காலத்தில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ரஞ்சன் நாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

தொடர்பான செய்தி: ரஞ்சனுக்கு தேசியப் பட்டியல்; அவசரப்பட்டு அறிக்கை விட்ட சஜித்: இப்போது வருத்தப்படுகிறார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்