
– பாறுக் ஷிஹான் –
காட்டு யானைகள் – நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, பிரதேசங்களிலுள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஊடுருவி அங்குள்ள சுற்றுமதில் மற்றும் பயனுள்ள வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளன.
அண்மைக்காலமாக இப்பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் இங்குள்ள கரவாகுப்பற்று கல்முனைக் கண்டத்துக்குள் நுழையும் காட்டு யானைகள் கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்குள் உட்புகுந்து தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இப் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரகாலமாக என்றுமில்லாத வகையில் காட்டு யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது.
கடந்த திங்கட்கிழமை (22) அதிகாலை 02 மணியளவில் நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மக்கள் குடியிருப்பு நிறைந்துள்ள பகுதிக்குள் நுழைந்த குறித்த காட்டுயானை அங்குள்ள வீட்டு மதில் மற்றும் வாழை, பலா உட்பட பயனுள்ள மரங்களையும் துவம்சம் செய்துள்ளது.
மேலும் இவ்வாறு இரவு நேரத்தில் திடீரென குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்ற காட்டு யானையினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் சம்பந்தரப்பட்ட திணைக்களத்தினர் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




