நாடு இல்லாத மன்னர்; பதவிக்கு பெரும் சண்டை: முடி சூடினார் மிசுசுலு

🕔 August 22, 2022

ஜுலு சாம்ராஜய மன்னராக மிசுசுலு கா ஸ்வெலிதினி முடிசூட்டப்பட்டார். ஓராண்டு நீடித்த குடும்ப சண்டைக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் நடந்த பாரம்பரிய விழாவில் இவர் மன்னராக முடி சூடப்பட்டார்.

ஜுலு என்பது தென்னாப்பிரிக்காவின் ஒரு பழங்குடி இனம். அதற்கென தனி நாடோ, எல்லையோ இப்போது இல்லை.

48 வயதான புதிய மன்னர், முந்தைய மன்னரின் மகன். ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர், அவர் முறையான வாரிசு இல்லை என்றும் மறைந்த மன்னரின் உயில் போலியானது என்றும் வாதிட்டனர்.

அவரது முடிசூட்டு விழா ‘க்வாகாங்கேலமன்கெங்கனே’ அரண்மனையில் சனிக்கிழமை நடந்தது. ஏதோ எழுத்துப் பிழை என்று எண்ணிவிட வேண்டாம். ஆங்கிலத்தில் அந்த அரண்மனையை KwaKhangelamankengane என்றுதான் எழுதுகிறார்கள்.

முடிசூட்டு விழாவுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். விலங்குகளின் தோல்களில் தைக்கப்பட்ட பாரம்பரிய உடையை அணிந்தும், பாரம்பரிய ஆயுதங்களைத் தாங்கியபடியும் அவர்கள் வந்தனர்.

அங்கு மன்னர் தனது மூதாதையர்களின் ஆவிகளை அழைப்பதற்காக புனிதமான கால்நடைத் தொழுவத்துக்குள் நுழைந்தார். அங்கு என்ன நடந்தது என்பது மிகவும் ரகசியமானது. அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மட்டுமே அங்கு செல்ல முடியும்.

முடிசூட்டு நிகழ்வின்போது அவரே வேட்டையாடிய சிங்கத்தின் தோலை மன்னர் அணிவார் என்று கூறப்பட்டிருந்தது. அவர் உண்மையிலே அரசராவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை நிரூபிப்பதில் அது ஒரு முக்கிய சாதனையாகும். விழாவை முன்னிட்டு 10க்கும் மேற்பட்ட மாடுகள் வெட்டப்பட்டன.

அடுத்த மாதம், அவருக்கு தென்னாப்பிரிக்க அரசு மக்கள் மத்தியில் இன்னொரு முறை முடிசூட்டு விழா நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.

நாடு இல்லாத சிம்மாசனம்

ஜுலு சிம்மாசனத்துக்கு முறையான அரசியல் அதிகாரம் ஏதும் இல்லை. தனியாக நாடு என்பதும் கிடையாது. ஆனால் தென்னாப்பிரிக்காவின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் ஜூலு இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மத்தியில் மன்னருக்கு செல்வாக்கு எப்போதும் உண்டு. ஜுலு இனத்தில் முடியாட்சியானது ஆண்டுக்கு 4.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வரி செலுத்தும் மக்கள் தொகையைக் கொண்டது.

ஜுலு ராஜ்ஜியம் கடந்த காலங்களில் ஒரு பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. இது 1879-ஆம் ஆண்டு நடந்த இசண்டல்வானா போரின் போது பிரிட்டிஷ் படைகளை தோற்கடித்ததற்காக உலகப் புகழ் பெற்றது.

இந்தப் பெருமைக்காகவே இதன் மன்னராவதற்கு போட்டி கடுமையாக இருக்கும். வாரிசுப் போர்கள் கொடூரமாக நடக்கும். சில சமயங்களில் ரத்தக் களரியாகிவிடும்.

புகழ்பெற்ற மன்னர் ஷாகா கா சென்சங்ககோனா 1816 -ஆம் ஆண்டில் அரியணையைக் கைப்பற்றுவதற்காக தனது சகோதரனைக் கொன்றார். அவருக்கும அதவே நடந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் மருமகன் சூழ்ச்சி செய்து அவரைப் படுகொலை செய்தார்.

இப்போது அரியணைக்கு வந்திருக்கும் மிசுசுலு கா ஸ்வெலிதினியும் எளிதாக முடியைக் கைப்பற்றிவிடவில்லை. இதற்கு முன் ஆட்சியில் இருந்த அவரது தந்தை குட்வில் ஸ்வெலிதினியின் இடத்தைப் பிடிப்பதற்காக மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பலர் போட்டியிட்டார்கள்.

மன்னர் குடும்பத்தில் பல பிரிவுகள் இருந்தன. ஏனென்றால் மறைந்த மன்னருக்கு ஆறு மனைவிகள். அவர் அரை நூற்றாண்டாக்கும் மேலாக அரியணையில் இருக்கும்வரை அவை வெளிப்படையாக மோதிக் கொள்ளவில்லை.

ஆறு மனைவிகள் அல்லவா? அதனால் மறைந்த மன்னரே யாரை வாரிசாக அறிவிப்பது என்பதில் குழம்பித்தான் போயிருப்பார்.

மன்னர் பதவிக்கு சண்டை

இப்படியொரு சூழலில் மூன்றாவது மனைவியான ராணி மாண்ட்ஃபோம்பிக்கு அடுத்த வாரிசைத் தேர்வு செய்வதற்கான பொறுப்பைக் கொடுக்கும் வகையில் மன்னர் பெயரில் ஓர் உயில் எழுதப்பட்டிருந்தது.

ராணி மன்ட்ஃபோம்பி மறைந்த மன்னரின் மனைவிகளில் மிக உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் அரச குடும்பத்திலிருந்து வந்தவர். ஆனால் ஜுலு இல்லாத வேறு ஒரு பழங்குடி இனம்.

மன்ட்ஃபோம்பி

ஜுலு இனத்தில் அவர் திருமணம் செய்து கொள்ளும்போதே, அவருடைய முதல் மகனுக்கு வாரிசுரிமையில் முதல் இடம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

அதனால் மன்னர் குட்வில் ஸ்வெலிதினி மறைந்ததும் மூன்றாவது மனைவியின் மகனான மிசுசுலு ஸ்வெலிதினியே மன்னராகப் போகிறார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. உயிலில் குறிப்பிடப்பட்டிருந்தபடி ராணியும், மிசுசுலிவின் தாயுமான மன்ட்ஃபோம்பியும் அதையே தனது விருப்பமாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால் மறைந்த மன்னரின் மகன்களில் மேலும் இருவர் அரியணைக்கு உரிமை கோரினர். அதனால் அரச குடும்பம் மூன்றாகப் பிளவுபட்டது. மிசுசுலு கா ஸ்வெலிதினி, சிமாகடே கா ஸ்வெலிதினி, புஸாபஸி கா ஸ்வெலிதினி ஆகிய மூன்று இளவரசர்களும் மன்னராவதற்குப் போட்டியிட்டனர்.

இந்தச் சமயத்தில் தென்னாப்பிரிக்க அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டது. மிசுசுலு கா ஸ்வெலிதினியை புதிய ஜுலு மன்னராக அங்கீகரிப்பதாக அந்நாட்டு அதிபர் அறிவித்தார். அதை மிசிசுலுவின் சகோததர் எம்போனிசி எதிர்த்தார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. முடிசூட்டுவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கிவிட்டது.

ஆனாலும் மிசுசுலுவின் பாரம்பரிய முடிசூட்டு விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக – அவரின் ஒன்றுவிட்ட சகோதரரும் மன்னரின் மூத்த மகனுமான சிமகடேவை புதிய மன்னர் என்று அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அறிவித்தார்கள். அதற்கு கணிசமான அரச குடும்ப ஆதரவும் இருந்தது.

மன்னரின் முதல் மகன் என்பதால் அவர்தான் இயற்கையான தேர்வு என்று அவரை ஆதரித்தவர்கள் கூறினார்கள்.

அதே நேரத்தில் கடந்த வியாழனன்று மன்னரின் மூன்று மகன்கள் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அதில் இளவரசர் புஸாபஸிதான் மன்னராக வேண்டும் எனவும், அவரே மன்னருடன் மற்ற அனைவரையும்விட நெருக்கமான உறவு கொண்டிருந்தார் என்றும் அறிவித்தார்கள்.

இந்தச் சிக்கல் – முடிசூட்டுவிழா நடந்த சனிக்கிழமையன்றும் தொடர்ந்தது. மிசுசுலுவின் ஒன்று விட்ட சகோதரிகள் சிலர் விழாவை நிறுத்தக் கோரி பீட்டர்மரிடஸ்பர்க்கில் உள்ள நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார்கள். மறைந்த தந்தையின் உயில் போலியானதாக இருக்கலாம் என்று அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர். ஆனால் அதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மிசுசுலு அரச குடும்பத்தில் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளார். மரபுப்படி அவரே வாரிசு உரிமையைப் பெற்றிருக்கிறார் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

சண்டைக்கான காரணம்

பழங்குடி இனங்களுக்கு இடையேயான பகைமையும் இந்த பதவிச் சண்டைக்கான காரணமாக இருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள். ஏனென்றால், தற்போது மன்னராகப் பதவியேற்றிருக்கும் மிசுசுலு நூறு சதவிகிதம் ஜுலு இனத்தைச் சேர்ந்தவர் இல்லை. அவரது தாய் எஸ்வாதினி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் அவரை அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் – மன்னரின் முழுமையான மனைவியாக ஏற்கவில்லை.

தென்னாப்பிரிக்காவில் பொது விடுமுறை நாளான செப்டம்பர் 24ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக பொதுமக்கள் மத்தியில் நடக்க இருக்கும் முடிசூட்டு விழாவுக்கு முன்னதாக – பகைமை அகற்றப்படும் எனப் பலர் நம்புகிறார்கள்.

தென்னாபிரிக்காவை பொறுத்தவரை கறுப்பினத்தவர் பெரும்பான்மையினர் என்றாலும் அவர்கள் அனைவரும் ஒரே பண்பாட்டையோ, மொழியையோ கொண்டவர்கள் அல்லர். பல்வேறு இனக் குழுக்கள் அவர்களிடையே இருக்கின்றன. ஜுலு, ஷோசா, பசோதோ, டிஸ்வானா உள்ளிட்டவை அதில் அடங்கும்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்