பௌத்தர்கள் சேவை பெறும் வைத்தியசாலைக்கு, முஸ்லிம்கள் உதவி புரிவதாக பௌத்த பிக்கு புகழாரம்
– அஸ்ரப் ஏ. சமத் –
ராகம வைத்திய சாலையில் 90 வீதமான பௌத்த மக்கள் சுகாதார சேவையைப் பெற்று வருகின்ற போதிலும், இவ் வைத்தியசாலைக்கு கடந்த 10 வருடங்களாக, முஸ்லிம் தனவந்தர்கள் உதவி வருகின்றனர் என்று வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத் தலைவர் குருவிட்ட தேரர் தெரிவித்தார்.
இவ்வாறு முஸ்லிம் தனவந்தர்களின் உதவிகள் கிடைப்பதற்கு, இவ் வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினுடைய பொருளாளராகச் செயற்படும் டொக்டர் முபாரக்தான் மூல காரணமாக உள்ளார் எனவும் குருவிட்ட தேரர் சுட்டிக் காட்டினார்.
ராகம வைத்தியசாலையின் 17 ஆம் இலக்க நோயாளர் விடுதிக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான பொருட்களை வழங்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத் தலைவர் குருவிட்ட தேரேர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
“எமது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினுடைய பொருளாளராகச் செயற்படும் டொக்டர் முபாரக் – ஒவ்வொரு நாளும் உரிய நோயாளர் விடுதிகளுக்கச் சென்று, அங்குள்ள பிரதான தாதிமார்களை அனுகி – அங்கு நிலைவும் குறைகளை கேட்டறிந்து கொள்கிறார்.
பின்னர், தனது மாவட்டத்திலுள்ள முஸ்லிம் தனவந்தர்கள், பெசன் பக் நிறுவனத்தார், அல்லது ஏதாவது ஒரு வகையில் முஸ்லீம் வர்த்தக அனுசரனையாளர்களிடம் பேசி, வைத்தியசாலைக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கின்றார்.
தனது இறுதி மூச்சு இருக்கும் வரை – இந்த வைத்தியசாலைக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதாக டொக்டர் முபாரக் உறுதியளித்துள்ளார். ஆனால் அவரிடம் பெரிதாகப் பணமில்லை. பஸ்களில் ஏறி இறங்கித்தான் – அவர் இங்கு வருகின்றார். ஆனாலும், கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றுகின்றார்’ என்றார்.
இந் நிகழ்வில் – மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ், வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் யு.எம்.எம். சமரனாயக்க, பிரதிப்பணிப்பளர் டொக்டர் தௌபீக், டொக்டர் முபாரக் ஆகியோரும் கலந்து கொன்டு உரையாற்றினார்கள்.
இதன்போது, 17 ஆம் நோயாளர் விடுதிக்கு வர்ணம் பூசுவதற்கான தீந்தைகள், சுவர்க்கடிகாரங்கள், மற்றும் கதவு – ஜன்னல்களுக்கான திரைச் சீலைகளை, உரிய பிரதான தாதியர்களிடம் டொக்டர் முபாரக் வழங்கினார்.