தானிஸ் அலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

🕔 August 1, 2022

ரூபவாஹினி தேசிய தொலைக்காட்சி கலையகத்துக்குள் பிரவேசித்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு  இடையூறு ஏற்படுத்தினார் எனும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தானிஷ் அலி  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (01) காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 13 ஆம்திகதி தேசிய தொலைக்காட்சிக் கலையகத்துக்குள் பிரவேசித்து வன்முறையில் ஈடுபட்டமை, அதன் ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் தானிஸ் அலி கைதுசெய்யப்பட்டார்.

இவர் கட்டுநாயக்கவிலிருந்து டுபாய் புறப்படவிருந்த விமானத்தினுள் வைத்து, கடந்த 26 ஆம் திகதி கைதானார்.

கடந்த ஜூன் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு – நிதியமைச்சின் பிரதிநிதிகளை சந்திக்க வந்த போது, நிதியமைச்சின் வாயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியமை தொடர்பான வழக்கில் மன்றில் முன்னிலையாகாமை தொடர்பில் மேற்படி நீதிமன்றால் தானிஷ் அலிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட அவர் – கடந்த ஜூலை 27 ஆம்திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஓகஸ்ட் 05 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும்,  ரூபவாஹினி கூட்டுத்தாபன வழக்கு தொடர்பில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தானிஸ் அலி – அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: டானிஸ் அலியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்