காலிமுகத் திடல் போராட்ட களம் மீது ராணுவம் பாய்ந்தது: பிபிசி செய்தியாளர்கள் மீதும் தாக்குதல்

🕔 July 22, 2022

காலிமுகத் திடல் – கோட்டா கோ கம பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதோடு அங்கிருந்த கூடாரங்களையும் அகற்றியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியே இருந்த போராட்டக்காரர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதாக தெரிவித்திருந்த நிலையில், நூற்றுக்கணக்கான துருப்புகள் மற்றும் பொலிஸார் இணைந்து போராட்டக்காரர்களை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது பிபிசி செய்தியாளர்கள் மணிகண்டன், அன்பரசன் எத்திராஜன், ஜெரின் சாமுவேல் ஆகியோர் பிபிசி நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, செய்தியாளர் ஜெரின் ராணுவத்தால் தாக்கப்பட்டார். அதோடு, ராணுவ வீரர் ஒருவர் அவருடைய கைபேசியைப் பறித்து, அதிலிருந்து வீடியோக்களை அழித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பிறகு இது நிகழ்ந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியிலிருந்து இளைஞர், யுவதிகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்களை கலைப்பதற்காக ராணுவம் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், பிபிசி தமிழ் பேஸ்புக் பக்கத்தின் ஊடாக நேரடி ஒளிபரப்பை வழங்கப்பட்டது.

இதன்போது, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர், பிபிசி தமிழ் செய்தியாளர்கள் மணிகண்டன், ஜெரின் ஆகியோரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, நாம் பிபிசி செய்தியாளர்கள் என்று எமது செய்தியாளர்கள் கூறி பாதுகாப்புப் பிரிவிற்கு தெளிவூட்டல்களை வழங்க முயன்ற சந்தர்ப்பத்தில், ஊடக கடமைகளுக்கு மீண்டும் மீண்டும் இடையூறு விளைவித்தனர்.

அதன் பின்னர், பிபிசி தமிழ் செய்தியாளர் ஜெரின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதுடன், ஜெரினுடைய வயிற்றின் மீது ராணுவ அதிகாரியொருவர் தனது பாதணி அணிந்த பாதங்களினால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதையடுத்து, ஏனைய பிபிசி செய்தியாளர்களின் உதவியுடன், தாக்குதலுக்கு இலக்கான செய்தியாளர் அருகிலுள்ள நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

குறித்த பகுதியைச் சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமையினால், வாகனங்கள் உள்ளே பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் முடியாத நிலைமை காணப்பட்டது.

அதன்பின்னர், 1990 என்ற இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டு, தாக்குதலுக்கு இலக்கான எமது செய்தியாளரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆம்புலன்ஸ் குறித்த பகுதிக்கு வருகை தந்து, பிபிசி செய்தியாளரை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உதவியது.

இந்நிலையில், குறித்த ஊடகவியலாளருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கொழும்பின் பிரதான பகுதிகளில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்