‘கட்டார் சரிட்டி’ மீதான தடையை நீக்க இலங்கை தீர்மானம்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

🕔 June 30, 2022

லங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் ‘கட்டார் சரிட்டி’ (கத்தார் அறக்கட்டளை) என்ற தொண்டு நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ‘ட்விட்டர்’ மூலம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கட்டார் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் கஞ்சன,  நேற்று (29) மாலை இந்த தொண்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

2019 ஆம் ஆண்டு கட்டார் சரிட்டி தொண்டு நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான தனது முடிவை, சட்டமா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதாகவும் இதன்போது குறித்த அதிகாரிகளுக்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கு தொடர்பில் ‘கட்டார் சரிட்டி’ நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக இலங்கை பெயரிட்டிருந்தது.

பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு குறித்த தொண்டு நிறுவனம் நிதியளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இருந்தபோதிலும், கட்டார் சரிட்டியை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தமை, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி அவரைக் குற்றம் சாட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணிகள் குற்றம் சாட்டினர்.

கட்டார் சரிட்டிக்கு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் உள்ளது. அங்கு பணியாற்றிய உள்நாட்டு சேவையாளர்களும் உள்ளனர்.

மேலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று பெயரிட்டாலும், அதன் சேவையாளர்கள் எவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லையென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

2019 ஆம் ஆண்டு கொழும்பில் ‘கட்டார் சரிட்டி’  தொண்டு நிறுவனத்தின் இலங்கை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments