நீதியை நோக்கிய பயணம்

🕔 June 1, 2015

03– முன்ஸிப் –

பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் புரியப்படும் பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரி, இன்று திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைதிப் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டது.

‘நீதியை நோக்கிய பயணம்’ எனும் தலைப்பில், நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் – இன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை, நடைபெற்ற அமைதிப் பிரசார நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாகவும் மேற்படி நடவடிக்கை இடம்பெற்றது.

தேசிய ரீதியாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த பிரசார நடவடிக்கையினை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் – மனித எழுச்சி நிறுவனம், அட்டாளைச்சேனை பெண்கள் அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவை ஒன்றிணைந்து நடத்தின.

பெண்கள் அமைப்புக்கள், வலையமைப்புக்கள் போன்றவற்றுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென உழைக்கும் மனித உரிமை அமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் – இன்றைய பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பெண்கள், சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு – துரிதமான சட்ட நீதி கோருதலும், பெண்கள் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகளை நாட்டிலும், சமூகத்திலும் எப்பொழுதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என உறுதி எடுத்தலுமே – மேற்படி பிரசார நடவடிக்கையின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது. 01050406

Comments

புதிது பேஸ்புக் பக்கம்