எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, ஓட்டோ கட்டணங்களும் உயர்வு

🕔 May 24, 2022

லங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை இன்று அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிகளின் (ஓட்டோ) போக்குவரத்து கட்டணத்திலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விலைகள் கடந்த இரண்டு சந்தர்பங்களில் அதிகரித்த போது முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

“அதன்போது பயணிகளுடன் கலந்துரையாடி கட்டணத்தை தீர்மானிக்குமாறு முச்சக்கரவண்டி ஓட்டுநர்களிடம் கோரிக்கை விடுத்தோம். இப்போது அப்படிச் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது”.

“எனவே முச்சக்கரவண்டித் தொழிலை நிலைநிறுத்தும் நோக்கில் முதல் கிலோமீட்டரின் கட்டணத்தை 100 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றர் பயணக் கட்டணத்தை 80 ரூபாவாகவும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை தொடக்கம் எரிபொருள்களுக்கான விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.

அதற்கமைய 92 ஒக்டைன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 420 ரூபா. 95 ஒக்டைன் பெற்றோல் லீட்டர் 450 ரூபா. 01 லீட்டர் ஓட்டோ டீசல் 400 ரூபா. சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 445 ரூபா.

Comments