ஒளிந்து விளையாடும் காவி அரசியல்

🕔 January 1, 2016

Article - 55
“ந
யனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை”

மேலே உள்ளது திருக்குறளாகும். அறத்துப் பாலில் வருகிறது. ‘பயனில்லாத பேச்சு, அறிவு கெட்டவன் என்பதைக் காட்டி விடும்’ என்பது, அந்தக் குறளின் பொருளாகும்.

‘குர்ஆனைத் தடைசெய்ய வேண்டும்’ என்று சில நாட்களுக்கு முன்னர், பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். குர்ஆனை தடைசெய்வதன் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஞானசார தேரரின் இந்தக் கூற்று, முஸ்லிம்களிடையே கொதி நிலையினை ஏற்படுத்தியிருந்தது. இறைவனின் திருவசனங்கள் அடங்கியதாக முஸ்லிம்கள் நம்புகின்ற புனித குர்ஆன் குறித்து, ஞானசாரர் இவ்வாறு கூறியமை தொடர்பில், முஸ்லிம்கள் அதீத கோபம் கொண்டனர். இவ்வாறு பேசிய ஞானசார தேரரை சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்க வேண்டுமெனவும், முஸ்லிம்களில் அதிகமானோர் குரலெழுப்பினர்.

முஸ்லிம்கள் உள்ளடங்கலாக பல்லினத்தவர் வாழுகின்ற இலங்கை போன்றதொரு நாட்டில், புனித நூலான குர்ஆனை இவ்வாறு தடைசெய்ய வேண்டுமென பேசுவதென்பது அறிவின் வெளிப்பாடாகவோ, நாகரீகமானதொரு எத்தனமாகவோ இருக்காது.

மத நம்பிக்கை என்பது மிகவும் உணர்வுபூர்வமானதாகும். அந்தவகையில், முஸ்லிம்களின் புனித நூலினை தடைசெய்யுமாறு கோரிக்கை விடுத்துக் கொண்டே, இலங்கையில் மத நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்று, ஞானசாரர் கூறுவது கோமாளித்தனங்கள் நிறைந்த கூற்றாகும்.

ஞானசார தேரர் என்பவர் யார்? பொதுபலசேனா என்கிற அமைப்பின் பின்னணி என்ன? என்கிற கேள்விகளுக்கு தெளிவான விடை தெரிந்தவர்கள், தேரரின் அறிக்கைகள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்கிற வாதமொன்றும் உள்ளது.

பொதுபலசேனா என்பது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். பௌத்த மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை விதைத்து, அதனூடாக முஸ்லிம்கள் மீது இனவாதம் கொண்ட பௌத்தர்களை ஏவி விடுவதற்காகவே, பொதுபலசேனா என்கிற அமைப்பு – மஹிந்த தரப்பின் ஆசீர்வாதத்துடன் உருவாக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் படமெடுத்தாடிய பொதுபலசேனா என்கிற நச்சுப் பாம்பானது, ஆட்சி மாற்றத்தின் பின்னர் கொஞ்சக் காலம் அடங்கிப் போய்க் கிடந்தது. இப்போது மீண்டும் சீறத் துவங்கியுள்ளது.

பொதுபலசேனா என்பது உண்மையில் ஒரு பௌத்த அமைப்பல்ல. அது – காவித் துணியினால் தனது முகத்தை மறைத்துக் கொண்ட ஓர் அரசியல் இயக்கமாகும். அதன் மூக்கணாங்கயிறுகள் ‘மஹிந்த அன் கோ’வின் கைகளில் உள்ளன.

பொதுபலசேனாவினரின் இஸ்லாமிய விரோதப் பேச்சுக்கள் தொடர்பில், இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறான எதிர்வினைகளை ஆற்ற வேண்டுமென பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ‘ஞானசார தேரர் என்பவர் ஒரு காவியுடைக் கோமாளி. அவரின் இஸ்லாமிய விரோதப் பேச்சுக்கள் தொடர்பில் முஸ்லிம்கள் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது. ஞானசாரரின் கருத்துக்களைக் கணக்கே எடுக்காமல் புறக்கணிப்பதுதான் சரியான வழியாகும்’ என்பது முஸ்லிம் சமூகத்திலுள்ள ஒரு சாராரின் கருத்தாகும்.

மௌனம் மற்றும் கணக்கெடுக்காமை என்;பது ஒரு வகைப் புறக்கணிப்பாகும். ஒருவரின் நடவடிக்கை என்பது, நம்மைப் பாதிக்கும் வகையில் அமைந்தாலும், அது தொடர்பில் எதுவித எதிர்வினைகளையும் ஆற்றாமல், ‘வெறுமனே’ இருத்தல் என்பது புறக்கணிப்பின் ஒரு வகையாகும்.

ஆனால், பொதுபலசேனா விடயத்தில் இந்த வகைப் புறக்கணிப்பினை முஸ்லிம்கள் மேற்கொள்வது வெற்றியளிக்குமா என்று தெரியவில்லை. பொதுபலசேனாவினரின் முஸ்லிம் விரோதச் செயற்பாடுகளை, முஸ்லிம்கள் கணக்கெடுக்காமல் புறக்கணிப்பதனை, முஸ்லிம்களின் இயலாமையாக பொதுபலசேனா அமைப்பு எண்ணிக் கொள்ளுமாயின், அந்தப் பாம்பு இன்னுமின்னும் முஸ்லிம்களை நோக்கி சீறத் துவங்கும் நிலை உருவாகும்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி வீழ்ந்து, மைத்தரி ஆட்சி மலர்ந்த புதிதில், பொதுபலசேனா குறித்து, முன்னாள் ஜனாதிபதியும் புதிய ஆட்சி உருவாகுவதற்கு பிரதான காரணகர்த்தாக்களில் ஒருவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க தெரிவித்த கருத்தொன்று இங்கு நினைவுகொள்வதற்குப் பொருத்தமானதாகும்.

‘பொதுபலசேனாவினரோ அல்லது வேறு அமைப்புக்களோ, இனிமேலும் முஸ்லிம்களைத் தாக்க முடியாது. அப்படித் தாக்க வந்தால், அவர்களைப் பிடித்து நாய்க்கூண்டில் அடைப்போம்’ என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூறியிருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் திஹாரியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சந்திரிக்கா இவ்வாறு தெரிவித்தமையானது, முஸ்லிம்கள் மத்தியில் பாரிய ஆறுதலையும், ஆசுவாசங்களையும் ஏற்படுத்தியது. பொதுபலசேனா போன்ற நச்சுப் பாம்புகளால், இனி தமக்கு ஆபத்தில்லை என்று முஸ்லிம்கள் நம்பினார்கள். ஆனாலும், அந்த நம்பிக்கை வெற்றியளிக்கவில்லை போலவே தெரிகிறது.

நல்லாட்சி அரசு என்று வர்ணிக்கப்படும் தற்போதைய ஆட்சியிலும், பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசத் துவங்கியுள்ளது. ஆனால், நல்லாட்சியாளர்கள், அதை – வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். குடித்து விட்டு ஒருவர் நடுவீதியில் நின்று குழப்படி செய்தால், அந்த நபரை ஓடிச்சென்று கைது செய்யும் பொலீஸார், முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை நோவினை செய்யும் வகையில் பேசிவருகின்ற ஞானசார தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் கையைப் பிசைந்து நிற்கின்றனர். முஸ்லிம்களைத் தாக்கினால், நாய்க்கூண்டில் அடைப்பேன் என்று கூறிய, சந்திரிக்கா அம்மையாரைக் காணவேயில்லை.

அப்படியென்றால், முஸ்லிம்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையினைத்தானா நல்லாட்சியாளர்களும் பின்பற்றுகின்றனர்? காவித் துணிகளுக்குள் ஒளிந்து கொண்டு ஆடுகின்ற இனவாதிகளுக்கு, நல்லாட்சி அரசாங்கமும் அச்சப்படுகிறதா? என்பவை உள்ளிட்ட பல கேள்விகள் இங்கு எழுகின்றன.

இவ்வாறானதொரு நிலையில், வெறுப்பூட்டும் வகையிலான வன்சொற்களைப் பிரயோகிப்போருக்கு எதிரான சட்டமொன்றினை உருவாக்கப் போவதாக, அண்மையில் அரசாங்கம் தெரிவித்திருந்தது. அடுத்த மதத்தவர்களை நோவினை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றவர்களைக் குறிவைத்தே இந்தச் சட்டம் உருவாக்கப்படவுள்ளதாக இதன்போது பலரும் பேசிக் கொண்டனர். வன்சொற்களைப் பிரயோகிப்போருக்கு எதிரான உத்தேச சட்ட மூலத்தினை, எதிர்வரும் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆனாலும், மேற்படி சட்டத்தினை உருவாக்குவது தொடர்பில் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தன. இவ்வறான சட்டமொன்றினை உருவாக்குதன் மூலம் பேச்சுச் சுதந்திரம் இல்லாமலாக்கப்படும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. வன்சொல் பிரயோகத்துக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இந்த நடவடிக்கையானது பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு ஒப்பானது எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, வன்சொல் பிரயோகத்துக்கு எதிராக கொண்டுவரத் தீர்மானித்திருந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுவதை பிற்போடுவதாக அரசாங்கம் அறிவித்தது.

வன்சொல் பிரயோகத்துக்கு எதிரான சட்டமொன்று நிச்சயம் உருவாக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில் அநேகர் விருப்பம் கொண்டுள்ளனர். ஆனால், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரங்களை அடக்கியொடுக்க முற்படுவதற்கு அரசாங்கம் முயற்சித்து விடுவோ என்கிற பயம் எதிர்க் கட்சிகளிடமும், பொது அமைப்புக்களிடமும் உள்ளது. இன்னொருபுறம், வன்சொல் பிரயோகத்துக்கு எதிரானவர்களைத் தண்டிப்பதற்கான சட்ட மூலத்திலுள்ள சரத்தானது, பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு நிகரானது என்றும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

அப்படியாயின், வன்சொல் பிரயோகத்துக்கு எதிரான சட்ட மூலத்திலுள்ள வழுக்களையும், அது தொடர்பான அச்சங்களையும் முதலில் அரசாங்கம் களைய வேண்டும். அதன் பின்னர், அந்தச் சட்ட மூலத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கான அங்கீகாரத்தினைப் பெறவேண்டும். அதனை விட்டு, எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பினைக் காரணமாகச் சொல்லிக் கொண்டு, வன்சொல் பிரயோகத்துக்கு எதிரான சட்டத்தினை உருவாக்கும் முயற்சியினை கைவிடுவதென்பது அரசாங்கத்துக்கு நல்லதல்ல.

உலகப் பிரசித்திபெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியொன்று சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் நடந்து கொண்ட விதமானது நாட்டின் கலாசாரத்துக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். குறித்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை திருக்கை வாலால் அடிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோபப்பட்டுள்ளார். இவ்வாறான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இனிமேல் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

ஆனால், ஜனாதிபதியின் இந்தக் கூற்றுக் குறித்து எதிர்க் கட்சிகளோ, பொது அமைப்புக்களோ எதிர்ப்பு வெளியிடவில்லை. குறித்த இசை நிகழ்ச்சியினைப் பார்ப்பவர்களின் சுதந்திரத்தில் ஜனாதிபதி கைவைத்துள்ளார் என்று யாரும் கூப்பாடு போடவில்லை.

இந்த நிலையில், பொதுபலசேன அமைப்பானது, முஸ்லிம்களை இழிவாகவும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் பேசுவதற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபப்படாமல் இருப்பது முஸ்லிம்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் மன வலிகளை விடவும், என்ரிக் இக்லேசியஸின் இசை நிகழ்சியின் போது நடந்த கலாசாரச் சீரழிவு, ஜனாதிபதியை அதிகமாகப் பாதித்துள்ளமையானது ஆச்சரியமளிக்கும் விதமாக உள்ளது.

நாட்டின் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்காக, மேற்சொன்னவாறான இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இடமளிக்க மாட்டேன் என்று கூறுகின்ற ஜனாதிபதி, நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக, வன்சொல் பிரயோகத்துக்கு எதிரான சட்டத்தினைக் கொண்டு வந்தே தீருவேன் என்றும் கூறியிருக்க வேண்டும்.

நாட்டில் குழப்பகரமானதொரு நிலையினை ஏற்படுத்த வேண்டுமென்பது மஹிந்த ராஜபக்ஷவினரின் விருப்பமாகும். பொதுபலசேனா அமைப்பினூடாக அதனை நிறைவேற்றுவதற்கு மஹிந்த தரப்பு முயற்சிக்கிறது. அதனைத்தான் ஞானசார தேரர் செய்து வருகின்றார். முஸ்லிம்களையும், இஸ்லாமிய மதத்தினையும் ஞானசார தேரர் தூற்றிப் பேசும்போது, பதிலுக்கு சிங்களவர்களையும், பௌத்த மதத்தினையும் முஸ்லிம்கள் தூற்றிப் பேச வேண்டும் என்பதுதான் பொதுபலசேனாவின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் வரை, அவர்கள் ஆகக்குறைந்தது முஸ்லிம்களுக்கு எதிரான வன்சொல் பிரயோகத்தினையாவது மேற்கொண்டவாறுதான் இருப்பார்கள்.

ஆனால், இதுவிடயத்தில் முஸ்லிம்களின் பொறுமையும் எந்தளவுக்குத் தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த யாரேனுமொருவர் பொறுமையிழந்து, பொதுபலசேனாவின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பாரதூரமான எதிர்வினையொன்றினை ஆற்றத் துவங்கும்போது, பொதுபலசேனாவினர் எதிர்பார்த்த குழப்ப நிலைவரமானது நாட்டில் ஏற்படக் கூடும்.

அப்போது, அந்த குழப்பகரமான நிலைவரத்தினையும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கான ஒட்டுமொத்தப் பொறுப்புக்களையும் நல்லாட்சி அரசாங்கமே தலையில் சுமக்க வேண்டிவரும்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (29 டிசம்பர் 2015)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்