கல்முனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மு.கா தலைவர் ஹக்கீமுக்கு கடும் எதிர்ப்பு

🕔 April 29, 2022

நூருல் ஹுதா உமர் –

ரசாங்கத்துக்கு எதிராக கல்முனையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக மக்கள் கோஷமிட்டதோடு, குறித்த ஆர்ப்பாட்டத்தில் குறைந்தளவானவர்களே கலந்து கொண்டதால் அந் நடவடிக்கை பிசுபிசுத்துப் போனது.

நாடுதழுவிய ரீதியாக இடம்பெற்றுவரும் – அசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தைப்போல், கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இன்று மாலை 1.30 மணியளவில் ‘கோத்தா வீட்டுக்கு போ’ என்ற தொனியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் அடங்கலாக முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் சோபிக்கவில்லை.

அரசாங்கத்துக்கு எதிராக கல்முனை மக்கள் கடுமையான அதிருப்தியில் இருந்தாலும் கூட, இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்துகொள்ளாமைக்கான காரணம் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னின்று நடத்தியவர்கள் மீதான கோபமாகவே அமைந்திருந்தது.

கல்முனை பிரதான வீதியை இடைமறித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் இடையில் சென்ற சமூக செயற்பாட்டாளர்கள் சிலர், தமிழ்- முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து கல்முனை பிரச்சினையை உடனடியாக முடிக்க வேண்டும் என்று கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான ஒருவர் – ஆர்ப்பாட்டத்தின் இடையில் புகுந்து; “ஹக்கீம் கொலைகாரன், சமூக துரோகி உடனடியாக கல்முனையை விட்டு வெளியேற வேண்டும், சாணக்கியன், சுமந்திரன் இருக்கட்டும்” என்று சத்தமிட்டார்.

இதேவேளை சிரேஷ்ட அரசியல்வாதிகள் இருக்கத்தக்கதாக மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொள்வதாக கூறி, ஆர்ப்பாட்டத்தை முடித்துவைத்தார்.

கல்முனை ஐக்கிய சமாதான சதுக்க முன்றலில் ஆரம்பித்து டாமாஸ் சந்தியில் முடிவுற்ற இந்த பேரணியில், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், சம்மாந்துறை மு.கா இளைஞர் அணியினர் என நூற்றுக்கும் குறைவானோர்களே இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்லிங்களின் ஜும்மா தினமான இன்று ஜும்மா தொழுகை முடிவுற்ற நேரத்தில் இடம்பெற்ற இந்த பேரணியில் கலந்துகொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டாமல் விட்டதனையும், அம்பாறை மாவட்ட தமிழ்- முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொள்ளவில்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்