தலைப்புச் செய்திகள்

ஹாபிஸ் நசீர் தன்னை அவமானச் சின்னமாக மாற்றிக் கொண்டுள்ளார்: மு.கா தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

புதிய அமைச்சரவையில் சுற்றுச் சூழல் அமைச்சராக மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என ஹக்கீம் தெரிவித்துள்ளதாக மு.கா. ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

“ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட 4 உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டமையானது மிகவும் அசிங்கமானது.

கட்சியின் உச்சபீடம் எதிர்வரும் வெள்ளிகிழமை (22) உத்தியோகபூர்வமாக ஒன்றுகூடி, நஸீர் அஹமட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்” என ரஊப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார் எனவும், மு.கா. ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.