அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

🕔 March 26, 2022

– அஹமட் –

க்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடசாலையின் பழைய மாணவரும் நலன் விரும்பியுமான ஏ.சி.எம். சமீர், இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார்.

அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடாசாலை அதிபர் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அக்கரைப்பற்று வயலக் கல்விப் பணிப்பாளரிடம் பாடசாலையின் அபிவிருத்திக் குழு 05 ஜனவரி 2022 அன்று எழுத்து மூலம் முறையிட்ட போதும், அதற்கு எதிராக வலயக் கல்விப் பணிப்பாளர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்து மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் அனுப்பி வைத்த முறைப்பபாட்டுக் கடிதத்தின் பிரதியினையும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டாளர் சமீர் கையளித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, இவ்விவகாரம் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கும் ஏ.சி.எம். சமீர் முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

‘பாடசாலையில் நடைபெற்ற நிதி மோசடிகளை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு முறையிட்ட பாடசாலை அபிவிருத்திக் குழுவினை கலைத்து, புதிய நிருவாகக் குழுவினை தெரிவு செய்ய முயலும் அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக’ எனும் தலைப்பில், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடசாலை அதிபருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகளை சுமத்தி, அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வயலக் கல்விப் பணிப்பாளரிடம் முறையீடு செய்த, அந்தப் பாடசாலையின் அபிவிருத்திக் குழு நிருவாகம் கலைக்கப்பட்டு, அதிபர் தலைமையில் இன்று (26) புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலை அதிபர் ஒழுக்கமற்று செயற்படுகிறார்; அபிவிருத்திச் சங்கம் குற்றச்சாட்டு: வலயக் கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்