01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்; டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை

🕔 February 22, 2022

மின்சார கட்டணம் 01 கோடியே 25 லட்சம் ரூபாவை செலுத்தாத அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சரொருவர் உள்ளார் என, இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த அமைச்சர் கிருலப்பனை, சரணங்கர மாவத்தையில் வசிப்பவர் என்றும், அவரது மின் கட்டணம் ராணுவத் தலைவர் ஒருவரின் பெயரில் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரின் வீட்டுப் பாதுகாப்புக்கு பொறுப்பான ராணுவத்தினர், மின் கட்டணத்தை சரிபார்ப்பதற்கான ஊழியர்களை, வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என்றும் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் மின் கட்டணம் 01 கோடி ரூபாவை தாண்டியுள்ளதாகவும், ஆனால் அந்த ஹோட்டலுக்கான மின்சாரம் துண்டிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான பெரிய இடங்களில் பெருந்தொகை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கின்ற போதிலும் அங்கு மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்றும், ஆனால் சாலையோர கடைகளில் சிறிய தொகை மின் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், அங்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதாகவும் ரஞ்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வீடுகள் அல்லது நிறுவனங்களுக்கு மின் இணைப்பைத் துண்டிக்குமாறு மின்சார சபை பணிப்புரை விடுத்துள்ளதை அதிகாரிகளுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்