அப்படி எவையும் நடக்கவில்லை: தந்தை தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட இரண்டு செய்திகளுக்கு நாமல் மறுப்பு

🕔 January 26, 2022

பிரதமரின் செயலாளராக கடமையாற்றிய நபரொருவர், தனது தந்தையின் தனிப்பட்ட கணக்கிலிருந்து பெருமளவிலான பணத்தை திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தனக்கு தெரியாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச வங்கியொன்றில் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து, பல மில்லியன் ரூபா பணத்தை செயலாளராகக் கடமையாற்றிய குறித்த நபர் மோசடியாகப் பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. .

இந்தச் செய்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ; உள்ளூர் பத்திரிகைகளில் வெளியான செய்திகளைப் பார்த்த பின்னரே இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியவந்ததாக கூறினார்.

“இவ்வாறானதொரு சம்பவம் நடந்தமை பற்றிய செய்திகளை, பத்திரிகைகளில்தான் பார்த்தேன். இதுபோன்ற சம்பவம் குறித்து நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. எனக்குத் தெரிந்தவரை அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை” என்றார்.

முன்னாள் சபாநாயகர் வி.ஜே.எம். லொக்கு பண்டாரவின் மகன் – உதித் லொக்கு பண்டார என்பவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் இருந்து இந்த மோசடி நடைபெற்றுள்ளதாகவும், 03 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இவ்வாறு கையகப்படுத்தப்பட்டதாகவும் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதமருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளையும் அமைச்சர் நாமல் மறுத்துள்ளார்.

“எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அது உண்மைக்குப் புறம்பானது. நானும் என் தந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியை மட்டுமே சந்தித்தோம். செய்திகளில் குறிப்பிட்டபடி எனது தந்தைக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்