பட்ஜட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் அஸீஸ்: கல்முனைக்கே அவமானம் அஸீஸின் அறிக்கை: ஜவாத்

🕔 November 22, 2021

– நூருல் ஹுதா உமர் –

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்து ஆதரவாக மு.காங்கிரஸின் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரவு – செலவுதிட்டத்துக்கு எதிராக ஹரீஸ் வாக்களித்து அதன்மூலம் கல்முனைக்கு எதிர்காலத்தில் ஆபத்துக்குள் ஏற்படுமானால், அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், மு.கா தலைவர் ஹக்கீம், மு.கா. உயர்பீடமே பதில் கூறவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இன்று (21) கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்முனை கிளை செயலாளர் மௌலவி ஏ. எல்.எம். நாஸர், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் எம்.எஸ்.எம். நஸீர், கல்முனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தேசமான்ய ஜௌபர், சுன்னத்துவல் ஜமாத் பேரவை தலைவரும், கல்முனை பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவருமான ஏ.எம். ஹனீபா, கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ்;

“பல நூற்றாண்டு காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவந்த முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் ஆட்சிபீடமேறிய சகல அரசாங்கத்துடனும் நெருக்கமான உறவை வளர்த்து வந்துள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தில் முஸ்லிங்களின் பக்கம் மிகவும் பலவீனமாக உள்ளது. மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் இந்த அரசாங்ககத்தில் பலவீனமாக உள்ளார்கள்.

இந்த காலகட்டத்தில் பல்வேறு சிக்கல்களை முஸ்லிங்கள் சந்தித்து வருகிறார்கள். வடகிழக்கில் ஏனைய சமூகங்களை சேர்ந்த பல்வேறு சக்திமிக்க அரசியல்வாதிகள் அரசாங்கத்தினுள் இருக்கத்தக்கதாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு – செலவு வாக்கெடுப்பில் எதிர்த்து நின்று அரசாங்கத்துடன் முட்டிமோதுவது, முஸ்லிங்கள் விடயத்தில் பிழையான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்க வழிவகுக்கும்.

கல்முனையை துண்டாடவும், ஏனைய மாவட்டங்களிலுள்ள முஸ்லிங்களின் காணிகளை தமக்கு பெற்றுக்கொள்ளவும் முஸ்லிங்களுக்கு எதிராக பல்வேறு திட்டமிடல்களை செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், சில இனவாத பொது இயக்கங்களும் பகிரங்கமாகவே முஸ்லிங்களுக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு – செலவு திட்ட விவகாரத்தில் அரசாங்கத்தைப் பகிரங்கமாக பகைத்துக் கொண்டு எதிரணியில் அமர்ந்து கொண்டு எதையும் சாதிக்க முடியாது.

எனவே கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அடங்கலாக ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிங்களின் கிராமங்கள், காணிப்புலங்கள், உரிமை சார் பிரச்சினைகள், எல்லைநிர்ணய ஆணைக்குழு என்று பல்வேறு விடயங்ககளை ஆராயவேண்டியவர்களாக உள்ளார்கள்.

எனவே கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சகல கட்சி எம்.பிக்களிடமும் நாங்கள் கேட்பது அரசாங்கத்திடம் மோதிக் கொள்ளாமல் தந்திரோபாய வியூகங்களை கையாண்டு பறிபோகும் நிலையிலுள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்பதே” என்றார்.

அஸீஸின் அறிக்கை அவமானகரமானதாகும்

இந்த நிலையில், சட்டத்துக்கு முரணாகவும் அடாத்தாகவும் அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேனளம் மற்றும் கல்முனை பெரிய பள்ளிவாசல் ஆகிவற்றின் தலைமைப் பதவிகளை தன்வசம் வைத்திருக்கும் டொக்டர் அஸீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் ஆதரவானவர்கள் சிலருடன் ஒன்றிணைந்து 2022ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என அறிக்கை விட்டிருப்பது – கல்முனைக்கு அவமானமாகும் என்று, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளருமான கே.எம். ஜவாத் தெரிவித்துள்ளார்.

அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் பதவி வருடத்துக்கு ஒருமுறை கைமாறப் பட வேண்டும் என்றும், அம்பாறை மாவட்டத்தின் ஒவ்வொரு ஊர் பள்ளிவாசல் தலைவர்களுக்கும் அந்தப் பதவி பகிரப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ள போதும், அதனை கடந்த பத்து வருடங்களாக எவ்வித கூட்டங்களும் கூடாமல் அடாத்தாக டொக்டர் அஸீஸ் தன்வசம் வைத்துக்கொண்டிருப்பதாக ஜவாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் கல்முனை பெரிய பள்ளிவாசலில் கடந்த ஒன்பது வருடங்களாக நம்பிக்கையாளர் சபை தெரிவின்றி சட்டத்துக்கு முரணாக, பள்ளிவாசலின் தலைமைப் பதவியை அஸீஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் ஜவாத் குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வாறான அடாத்துக்களில் ஈடுபட்டுள்ள டொக்டர் அஸீஸும்ட, ஹரீஸ் எம்.பியின் ஆதரவாளர் சிலரும் கூடி, வரவு – செலவுத் திட்டத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவளிக்க வேண்டும் எனக் கூறியிருப்பது கல்முனைக்கு அவமானமாகும்”.

இந்த வரவு – செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பானது, இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களின் மானத்தையும், அல்லாஹ்வை நிந்தித்தவர்களையும் அடையாளப்படுத்தும் வாக்கெடுப்பாகும்.

பயங்கரமான வறுமைக்குள் இந்த நாடு தள்ளப்பட்டு மக்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் ஆட்சிக்கு ஆதரவளிப்பதில் கல்முனை உடன்பட்டள்ளது என எதிர்காலத்தில் மொத்த ஊரையும் காட்டிக் கொடுத்த அவமானத்தை அல்லாஹ்வின் பள்ளிவாசலில் இருந்து கொண்டு செய்தமை ‘பயங்கரவாதத்தின் சூத்திரதாரி அல்லாஹ்’ என்று சொன்ன பாவியுடன் இணைந்து, எம் ஊரையும், மக்களையும் காட்டிக் கொடுத்ததற்கு ஒப்பானதாகும். இந்த ஆதரவை ஏற்கும் ஒவ்வொருவரும் மறுமையில் பதில் கூற வேண்டும்” எனவும் ஜவாத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்