நிரூபமாவிடம் உள்ள சொத்து; மாதம் ஒரு கோடி செலவு செய்தாலும், 250 வருடங்கள் தாங்கும்: துஷார எம்.பி தகவல்

🕔 October 6, 2021

நிரூபமா ராஜபக்ஷ வெளிநாட்டில் திருட்டுத்தனமாகச் சேமித்து வைத்துள்ள 03 ஆயிரத்து 500 கோடி ரூபா விவகாரம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு புறம் யொகானி என்ற பாடகி சர்வதேச அளவில் புகழ் பெற்றதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் நிரூபமா ராஜபக்ஷ என்ற பெண்ணும் சர்வதேச அளவில் புகழ்பெற்றதையிட்டு இலங்கையராக நாம் வெட்கப்படுகின்றோம்.

இந்த ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த நிரூபமா ராஜபக்ஷ என்பவர் வெளிநாட்டில் திருட்டுத்தனமாக 03 ஆயிரத்து 500 கோடி ரூபாவை சேமித்து வைத்த நிலையிலேயே புகழ் பெற்றுள்ளார்.

இந்த 03 ஆயிரத்து 500 கோடி ரூபாவில் ஒரு மாதத்துக்கு ஒரு கோடி ரூபா என்ற அடிப்படையில் செலவழித்தால் 250 வருடங்களுக்கு இவரின் 05 தலைமுறைகள் சொகுசாக வாழமுடியும்.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபா என்ற வகையில் செலவழித்தாலும் 900 வருடங்களுக்கு இவரின் 18 தலைமுறைகள் இந்தப் பணத்தில் சொகுசாக வாழ முடியும்.

நிரூபமா ராஜபக்ஷவுடன் ராஜபக்ஃக்களை சேர்த்தால் ஒரு சமன் பாட்டையே உருவாக்க முடியும் என குறிப்பிட்டு்ளளார்.

உலகிலுள்ள தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு மற்றும் செல்வம் தொடர்பாக அண்மையில் ‘பன்டோரா பேப்பர்ஸ்’ எனும் பெயரில் வெளியிடப்பட்ட தகவலில், நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரின் கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் சொத்து விபரங்களும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: பன்டோரா பேப்பர்ஸ்: உலகப் பிரபலங்களின் சொத்துகள் பற்றிய தகவல்கள் கசிவு; நிருபமா ராஜபக்ஷவின் விவரமும் உள்ளடக்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்