தன்னைத் தானே தேடிய மனிதர்: துருக்கியில் விநோதம்

🕔 October 1, 2021

துருக்கியில் ஒருவர், தன்னைத் தானே தேடும் பணியில் சில மணி நேரங்களுக்கு ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. சிறிது நேரத்துக்குப் பிறகே தேடப்படும் நபர் தான்தான் என்ற விவரம் அவருக்குத் தெரியவந்துள்ளது.

பேஹன் முட்லு என்கிற நபர், கடந்த செவ்வாய்கிழமை துருக்கியின் புர்ஸா என்கிற மாகாணத்தில் தன் நண்பர்களோடு காட்டில் அலைந்து திரிந்து கொண்டே மது அருந்தியுள்ளார்.

அவர் காட்டிலிருந்து திரும்பி வரவில்லை என்பதை அறிந்து, அவரது மனைவி மற்றும் நண்பர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் விவரத்தை தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளும் ஒரு குழுவை அனுப்பி, பேஹன் முட்லுவை தேடத் தொடங்கினர்.

50 வயதான முட்லுவும், தேடி வரும் அணியினரை பார்த்து ஆச்சர்யப்பட்டு, வேறு யாரையோ தேடுவதாக நினைத்து, அவர்களோடு சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டார் எனஉள்ளூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தேடுதல் குழுவில் உள்ளவர்கள் அவரின் பெயரை உரக்கச் சொல்லி அழைத்த போது, தான் இங்கேயே இருப்பதாகக் கூறினார் பேஹன் முட்லு.

அதன் பின் தேடுதல் குழுவில் இருந்த அதிகாரிகள், அவரிடமிருந்து வாக்குமூலம் பெற அழைத்துச் சென்றனர்.

அதன் பிறகு, முட்லுவை காவலர்கள் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு ஏதாவது அபராதம் விதிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதாவது தண்டனை வழங்கப்பட்டதா என தெளிவாகத் தெரியவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்